Home இலங்கை கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? நிலாந்தன்.

கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? நிலாந்தன்.

by admin


நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந்து போராடுவது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.


சிங்கள மக்கள் போராடுவது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக. ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 2015 இல் நடந்ததுதான் திரும்பவும் நடக்கும். ஏனென்றால் ஆட்சி மாற்றம் எனப்படுவது, இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தைத்தான் மாற்றும். மாறாக அரசுக் கட்டமைப்பை மாற்றாது. தமிழ் மக்கள் கேட்பது அரசுக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்று. ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றி இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு சமஸ்டி கட்டமைப்பைத்தான் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் ஆட்சி மாற்றத்துக்கு உரியவை அல்ல.அவை அரசுக் கட்டமைப்பில் மாற்றத்தை கேட்பவை.

ஏற்கனவே 2015இல் ஒரு ஆட்சி மாற்றத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ்மக்கள். அந்த ஆட்சிமாற்றத்தின் எதிர்மறை விளைவுதான் மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை நோக்கி ராஜபக்சக்கள் உழைக்கக் காரணம். தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை ஆட்சிமாற்றத்தின் அப்பாவிப் பங்காளிகளாக மாறி ஏமாற்றம் அடைய முடியாது. எனவே சிங்களமக்கள் இப்பொழுது தென்னிலங்கையில் நடத்தும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.


தென்னிலங்கையில் நடக்கும் போராட்டங்கள் ஒரு பகுதி தன்னியல்பானவை. இன்னொரு பகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுவன. தென்னிலங்கையில் உள்ள நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வீதியில் இறங்கியிருக்கிறது. ஏனென்றால் மின்சாரம் இல்லை,எரிவாயு இல்லை, அத்தியாவசிய பொருட்கள் இல்லை.மின்சாரம் இல்லையென்றால் விசிறி இல்லை, குளிரூட்டி இல்லை. காலமோ கோடை. அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்படியிருப்பது? கிராமத்தில் கல்லை வைத்து விறகில் சமைக்கலாம். ஆனால் அடுக்குமாடியில் என்ன செய்வது?பிரச்சினை நடுத்தர வர்க்கத்தை தாக்கிவிட்டது. அவர்கள் தெருவில் இறங்கினார்கள். கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை உருவாக்கினார்கள். அந்த கோஷத்துக்கு உயிர் கொடுத்தார்கள். ஜனாதிபதியின் மாளிகையை முற்றுகையிட்டார்கள்.

சிங்கள மக்கள் முன்வைக்கும் கோஷங்களில் பெரும்பாலானவை ஆளும் அரசாங்கத்துக்கு எதிரானவைதான். சிங்களபவுத்த அரசுக் கட்டமைப்புக் எதிரானவை அல்ல என்பதனை தமிழ்மக்கள் கவனிக்கவேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களில் மிகச்சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் ஆட்சிமாற்றத்தைத்தான் கேட்கிறார்கள். மிகச்சிலர்தான் தமிழ்மக்களுக்கு நீதி வேண்டும்,போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையினர்.அவர்களால் பெரும்பான்மை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.ஆனால் தமிழ்மக்களின் உண்மையான நண்பர்கள் அவர்கள்தான். அவர்களை எப்பொழுதும் தமிழ் மக்கள் மதித்து நடக்க வேண்டும்.


அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரை தமிழ்மக்கள் தமது கோரிக்கைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு, இனப்படுகொலைக்கு நீதி போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் தமிழ்மக்கள் அவர்களோடு இணைந்து போராடலாம்.12 ஆண்டுகளுக்கு முன் யுத்த வெற்றியை பால்சோறு பொங்கி கொண்டாடிய ஒரு மக்கள் இப்பொழுது அதே யுத்த வெற்றி நாயகரை கீழ்தரமான வார்த்தைகளால் நிந்தித்து வீட்டுக்குப் போ என்று கேட்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு பழி வாங்கியவருக்கு உண்டாகும் திருப்தியை கொடுக்கலாம். ஆனால் பிரச்சினை அதைவிட ஆழமானது.


கோட்டாபய ஒரு கருவிதான்.மஹிந்தவும் ஒரு கருவிதான். சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அரசின் கருவிகளே அவர்கள்.இன ஒடுக்குமுறையை அவர்கள் உச்சத்துக்குக் கொண்டு போனார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.இன ஒடுக்குமுறையானது மகிந்தவுக்கும் முன்னரும் இருந்தது.தமிழ் மக்கள் போராட வேண்டியது இனஒடுக்குமுறைக்கு எதிராகத்தான். இனஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கும் அரசுக் கட்டமைப்பு எதிராகத்தான்.ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான போராட்டம் என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான பெரும் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதுவே முழுப் போராட்டம் ஆக முடியாது. ஒரு குடும்பத்தை மட்டும் எதிராக பார்த்து அந்தக் குடும்பத்தை அகற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்புவது ஆட்சி மாற்றத்தில்தான் முடியும். இதுதான் 2015 ஆம் ஆண்டு நடந்தது.


எனவே தமிழ் மக்கள் இப்பொழுது மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டம் முற்போக்கானதே. அதே சமயம் சிங்கள மக்களோடு இணைந்து போராட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கோட்டாவை ஆட்சியில் இருந்து அகற்றத் துடிக்கும் எந்த ஒரு எதிர்க்கட்சியும் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளவில்லை.13ஆவது திருத்தத்தை தாண்டிப் போகத் தயாராகவும் இல்லை.இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை கேட்கவும் முடியாது, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வும் முடியாது. ஏனென்றால் எனது கடந்த வாரத்துக்கு முதல் வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தேசிய அரசாங்கம் என்பது சிங்கள பௌத்த தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால் அதில் தமிழ்மக்கள் இணைவதில் எந்த பயனும் கிடையாது. அது ஒரு பல்லித்தன்மை மிக்க தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால்,தமிழ் பிரதிநிதிகள் அதைக்குறித்து தீவிரமாக யோசிக்கலாம்.


எனவே தென்னிலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை க் கண்டு தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.கிருணிகாவுக்கு ரசிகர் மன்றத்தை கட்டியெழுப்பவும் தேவையில்லை.இப்பொழுது சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதி முறையை அகற்ற வேண்டும் என்று.ஆனால் அவரும் இதற்கு முன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்.மட்டுமல்ல சந்திரிகாவும் அவ்வாறு போட்டியிட்டவர்தான்.போட்டியிடுவதற்கு முன்பு ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்பார்கள்.ஆனால் தேர்தலில் வென்றதும் அதை மறந்து விடுவார்கள்.நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை என்பது இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை பலவீனப்படுத்தும் பல அம்சங்களில் ஒன்றுதான்.ஆனால் அதைவிட ஆழமான அம்சங்கள் உண்டு.சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்புதான் இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை தொடக்கத்திலிருந்தே பலவீனப்படுத்தியது.இச்சிறிய தீவின் பல்லினத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமைதான் எல்லாவற்றுக்கும் மூல காரணம். எனவே இங்கு தேவையாக இருப்பது யாப்பு மாற்றம். அந்த யாப்பு மாற்றத்துக்குள் ஜனாதிபதி முறைமையும் அடங்கும்.இந்த அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்குமாறு தமிழ் தரப்பு எதிர்க்கட்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.அவ்வாறு ஊக்குவித்து இது விடயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஓர் அரசியல் உடன்படிக்கையை உருவாக்க வேண்டும். இது எரிகிற வீட்டில் லாபம் பிடுங்கும் அரசியல்தான்.ஆனால் அது தவிர்க்க முடியாதது.அப்படி ஒரு உடன்படிக்கையைச் செய்ய முடிந்தால் அடுத்த கட்டமாக சிங்கள மக்களோடு இணைந்து தெருவில் இறங்கலாம்.


தென்னிலங்கையில் நடப்பவைகளோடு ஒப்பிடுகையில் தமிழ்மக்கள் அந்த அளவுக்கு கடந்த 12 ஆண்டுகளில் போராடவில்லை என்பது உண்மைதான். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தம்மை நோக்கி வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டைத் திரும்பவும் போலீசாரை நோக்கி வீசுகிறார்கள். போலீசாரின் தற்காலிகத் தடுப்புகள் உருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள். அதிரடிப் படையோடு நெற்றிக்கு நேரே வாக்குவாதப்படுகிறார்கள்.எல்லாம் சரிதான்,ஆனால் அவர்கள் அவ்வாறு எதிர்த்துப் போராடுவதால் அவர்களை யாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதில்லை. இதையே தமிழ் மக்கள் செய்தால் நிலைமை என்னவாகும்? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப் போட்டுவிடுவார்கள். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் சட்டமறுப்பு போராட்டங்கள் பெருமெடுப்பில் தொடர்ச்சியாக நடக்காமைக்கு அதுவும் ஒரு காரணம்.


பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலிமையாக கேட்பதற்கு இது ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். கோட்டாவை வீட்டுக்கு அனுப்பத் துடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைப்பார்களா? பயங்கரவாத தடைச்சட்டம் இல்லையென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட ஆக்ரோஷமாக போராட முன் வருவார்கள். ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்தான் தமிழ் அம்மாக்கள் காணாமல் போன தமது உறவுகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கத்தக்கதாகவே கேப்பாபிலவில் பெண்கள் காணிக்காகப் போராடினார்கள்.இரணைதீவுப் பெண்கள் தமது வீடுகளை மீட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்கள் அதிரடிப்படையின் துப்பாக்கி வாய்க்கு நேரே நின்று நியாயம் கேட்கிறார்கள். ஆனால் இவையாவும் சிறிய மற்றும் தெட்டம் தெட்டமான போராட்டங்கள்தான். தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பது போன்று பெருமெடுப்பிலான தொடர்ச்சியான போராட்டங்கள் அல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் இல்லை என்று சொன்னால் தமிழ் அம்மாக்கள் இதைவிட ஆக்ரோஷமாக போராடுவார்கள். அதை அரசாங்கம் தாங்காது.


கடந்த வாரம் கிருனிக்கா யாழ் பேருந்து நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்களின் விளைவாக யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு சிறு ஆதரவு அலை ஏற்பட்டது. ஆனால் இதே கிருனிக்கா கடந்த 12 ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்காகப் போராடும் அம்மாக்களோடு சேர்ந்து போராடினவரா?கேப்பாபிலவில்,இரணைதீவில் தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து போராடினவரா?இல்லையே.இதுதான் தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இடம்.


எனவே தென்னிலங்கையில் நடப்பவை ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி என்ற அடிப்படையில் அதன் முற்போக்கான அம்சத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் அந்த போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்து நிபந்தனையின்றி ஆதரிக்கவும் தேவையில்லை. இதை இந்த கட்டுரை சொல்லித்தான் தமிழ்மக்கள் செய்ய வேண்டும் என்றும் இல்லை.ஏனென்றால்,ஏற்கனவே தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மக்களோடு பெருமெடுப்பில் இணையவில்லை. தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி நிலமை அப்படித்தான் இருக்கிறது. கிளிநொச்சி வளாகத்தில் உள்ள சிங்கள மாணவர்கள் போராடியபோது தமிழ் மாணவர்கள் அதில் பெரிய அளவில் இணையவில்லை. அப்படித்தான் யாழ் பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்கள் போராடிய பொழுது ஒப்பீட்டளவில் குறைந்தளவு எண்ணிக்கையான தமிழ் மாணவர்கள்தான் அதில் இணைந்தார்கள். இவ்வாறாக கடந்த வாரம் முழுவதும் நாடுபூராகவும் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கும் யதார்த்தம் எதுவென்றால் நாடு இவ்வாறான போராட்டங்களின் போதும் பெருமளவுக்கு இனரீதியாக பிளவுபட்டு நிற்கிறது என்பதே.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More