யோக சுவாமிகளது 58ஆவது குருபூசை நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் அனுட்டிக்ப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
இன்று (11.04.2022) யோகசுவாமிகளது குருபூசை நாள். சிவதொண்டன் நிலையத்திலே தங்கப்பொம்மை போல எழுந்திருளியிருக்கும் சற்குரு யோகருக்குத் திவ்வியமான அபிடேக ஆராதனைகள் நிகழும். அன்பரெல்லாம் கூடி எங்கள் குருநாதன் எழிலார் திருவடியைப் பாடிப்பரவி உளங் குளிர்வார்கள். இன்று பங்குனிக் கடைசித் திங்களுமாகும். நம்மவரெல்லாம் அம்மாளாச்சிக்குப் பொங்கலிட்டுப் பூசித்து நிறைவுறுவர். ஆதலால் குருபக்தியோடும் இறையுணர்வோடும் உளம் தூயராய் வாழ்வதற்கான ஓர் நன்னாள் இது.
இந்நன்னாளிலே குருவாக்கைத் துணைக்கொண்டு குருவின் பெருமையறிந்து போற்றுதல் நன்று. குருநாதன் பாடிய நற்சிந்தனைப் பாட்டொன்றில் உள்ள சிறிய அளவிலான ஆறு வரிகள் இவை :
“தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே.
பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை
முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே.
அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினோர் அருந்தவத் தோரே.”
சற்குருவானவர் குறித்தவோர் பெயரும் உருவமுடையவரல்லர். அவர் அங்கும் இங்கும் எங்குமானவர். நீயும் நானும் அவனும் அவளுமாய் நிற்பவர். அவர் அவரது அடியவர்க்கு மட்டுமானவரல்லர். அவர் எல்லார்க்குமானவர். யோகசுவாமிகள் ஆசார சீலர்க்கு மட்டுமன்றி அனாச்சாரிகளோடும் அன்பு பூண்டிருந்தார். சைவரோடு சைவரல்லாதாருக்கும் அருள் சுரந்தவர். அவர் சாதி சமயம் என்னும் சங்கடத்துக்குள்ளாகாதவர். எங்கும் செறிந்தவராயிருப்பது போலவே என்றுமுள்ளவராயும் இருக்கின்றார்.
அவர் பிறப்பிறப்பைக் கடந்தவர். ஆதலால் அவர் என்றும் உள்ளவர். என்றுமுள்ள அவர் இன்றும் உள்ளார். இன்றும் எல்லாருடனும் கூடியிருக்கின்றார். எல்லாரிடத்தும் அருள் சுரக்கின்றார். எல்லாரதும் அறியாமை இருளை நீக்கும் ஞானசூரியனாய் ஒளிர்கிறார். இருள் நீக்கும் சூரியன் போன்று அக இருளை நீக்கி அருள்கின்றார். சூரியோதயத்தின் போது தடாகத்தில் உள்ள பருவ மொட்டுக்கள் மலர்கின்றன. சிறு கன்னிகளும் முதிர்கின்றன. அவ்வாறே குருவருளினால் பக்குவர்கள் மெய்யடியார்களாக மலர்கின்றனர். மற்றையோரும் தத்தம் படித்தரத்தினின்றும் உயர்கின்றனர். குருவருள் எல்லோரிடத்தும் பரவுகின்றது. ஆதலினால் குருபரனை வணங்குதல் நன்று. குருபக்தியே பெரும்பேறு. குருவை வணங்குவோரை அருந்தவத்தோர் என்று யோககுருபரன் கூறியிருக்கிறார்.
குருபூசை நாட்களிலே குருநாதன் கூறிய ஒரு விடயத்தையாதல் மனதில் பதித்து அவ்வாண்டு முழுதும் சிந்தித்துத் தெளிந்து அதன்படி வாழ்ந்து உறுதியுறுதல் நன்று. அவ்வாறு உறுதியுறுவதற்கான ஒரு விடயம் மேலே தரப்படுகிறது. எளிமையும் தெளிவுமுடைய வசன வடிவிலுள்ளதால் விளக்கம் வேண்டியதில்லை. விளக்கம் வேண்டியிருந்தால் அவ்வசனங்களை அருளிய யோககுருவின் அருளே வேண்டும்போது அதனை நல்கும். அவ்வசனங்களில்; உள்ளது போன்று நம்பிக்கையே நமக்கு வேண்டப்படுவது:
“கடவுள் ஒருவர் இருக்கிறார்
அவர் எங்கும் இருக்கிறார்
என்னோடும் கூட இருக்கிறார்
எனக்குச் சக சம்பத்தும் உண்டு”
என்று பெரியார் கூறுகின்றார்கள். அதை நான் நம்பி வாழ்கிறேன். நீங்களும் அதிகம் படிக்க வேண்டியதில்லை. இதையே சாதனை செய்தால் போதும்.
சிவதொண்டன் சபையார்,
434, காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம்.