விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சாந்த பண்டார, அரசியல் தற்கொலை செய்துகொண்டார் என, சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த நேரத்தில் இந்த அரசாங்கத்திற்கு யாரும் முட்டுக்கொடுப்பார்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பளார் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சு.க அலுவலகத்தில் பதற்றம்
கொழும்ப-10 டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைமையகத்துக்கு சென்றபோதே இந்த பதற்றம் ஏற்பட்டது.
தலைமை காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், கடும் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கலந்துரையாடலில் ஈடுபட்டு, நிலைமையை வழமைக்குக் கொண்டுவந்துள்ளார் என அறியமுடிகின்றது.