பாரிஸ் நோர்த் டாம் மாதா கோவிலின் நிலத்தடியில் இருந்து புராதன கற்பேழை ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருக்கிறது. 2019 இல் தீக்கிரையாகிய மாதா தேவாலயத்தின் கூரை உட்பட அதன் கட்டுமானங்களைப் புனரமைக்கும் பணிகள் தற்சமயம் அங்கு நடைபெற்று வருகின்றன. அதன் போது தேவாலயத்தின் உள்ளே ஒரு பகுதியில் தரை தோண்டப்பட்ட சமயம் சுமார் இருபது மீற்றர் ஆழத்தில் கல்லினாலான புராதன சவப்பேழை(sarcophagus) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மனித உருவிலான – நன்கு பாதுகாக்கப்பட்ட-அந்த மர்மப் பேழை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அவர்கள் பேழையை திறக்காமலேயே அதன் உள்ளே இருக்கின்ற பொருள்களை என்டோஸ்கோபிக் கமரா (endoscopic camera) மூலம் ஆய்வுசெய்துள்ளனர்.
எலும்புக் கூட்டின் மேற்பகுதி, இலைகளாலான தலையணை,துணி மற்றும் சில பொருள்களை உள்ளேஅடையாளம் கண்டுள்ளனர். பாதுகாப்பான இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் பேழை விரைவில் தென் மேற்கு நகரமாகிய துளுசில் (Toulouse) அமைந்துள்ள தேசிய தடயவியல் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் திறந்து பரிசோதிக்கப்படவிருப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருடையது என்ற அடையாளம் தெரியாத அந்த மனித எச்சம் எவ்வாறு, ஏன்நோர்த் டாம் தேவாலயத்தின் அமைவிடத்தின் கீழ் புதைக்கப்பட்டது? கடந்த பலநூற்றாண்டுகளாக அது அங்கேயே இருந்துவந்ததா,அல்லது அங்கு மீளப் புதைக்கப்பட்டதா? அதன் அடக்க வடிவமைப்பு முறை, அதன்காலம், இறந்தவரது சமூக நிலை என்பனசொல்கின்ற செய்தி என்னவாக இருக்கும்?இவை போன்ற பல கேள்விகளை எழுப்கியிருக்கின்ற அந்தக் கற்பேழை தொடர்பான புதிர்களை அறிவதற்காக பிரான்ஸின் கத்தோலிக்கர்கள் உட்பட நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
பாரிஸின் உலகப் புகழ் பெற்ற சின்னங்களில் ஒன்றாகிய – 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (Gothic)-நோர்த் டாம் மாதா தேவாலயத்தின் உயர்ந்த மரக் கூம்புக் கூரை உட்பட அதன் பெரும் பகுதிகள் தீயினால் எரிந்து அழிவுண்டமை தெரிந்ததே
.——————————————————————- –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 15-04-2022