நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டை மறுக்கிறார் அஜித் நிவார்ட் கப்ரால்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தாம் தொடர்பில் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ராலும் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான குரல் எனும் செயற்திட்டத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு அனுமதியின்றி முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதி வழங்கியதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
6.5 மில்லியன் ரூபா இவ்வாறு கு றித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் போதே, முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் அதனை மறுத்துள்ளார்.
அத்துடன், தமக்கு எதிராக தவறாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டை மறுக்கிறார் நாமல்!
தாம் தொடர்புபடாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனைகள் குறித்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, நல்லாட்சி அரசாங்கம் தன்மீது சுமத்திய பல குற்றச்சாட்டுகளுக்காகவே தான் இன்னும் நீதிமன்றத்துக்கு செல்வதாகவும் இதனுடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை பல மில்லியன் டொலர் பெறுமதியான வைத்தியசாலைத் திட்டத்துடன் தொடர்புடைய பாரிய ஊழலை அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஆவணப்படத்தின் மூலம் வெளியிட்டிருந்தது, அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (03.05.22) பதில் பதிவிட்டிருந்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை நாமல் தெரிவித்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணத்தின் போது பொருட்கள், சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டத்தை அவுஸ்திரேலியாவின் அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் பெற்றுள்ளது.
அஸ்பென் மெடிக்கலினால் இலங்கைக்கு செய்யப்பட்ட முதல் பரிவர்த்தனையில், இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமான சபர் விஷன் ஹோல்டிங்ஸ் என்ற பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்துக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதாக ஃபோர் கோர்னர்ஸ் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட டச்சு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே மேற்குறிப்பிட்ட பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட 2.1 மில்லியன் அஸ்பென் மூலம் செலுத்தப்பட்ட 4.3 மில்லியன் தொகையின் ஒரு பகுதியாகும் என்றும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் நிமல் பெரேரா, பல தசாப்தங்களாக இலங்கையின் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமான ராஜபக்ஷ குடும்பத்துடன் தொடர்புடையவர் என, ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்சவின் சார்பில் பணம் வசூலித்ததாக நிமல் பெரேரா வாக்குமூலம் அளித்தமையாலேயே 2016ஆம் ஆண்டு நாமல் ராஜபக சிறையில் அடைக்கப்பட்டதாக ஃபோர் கோர்னர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
மைத்திரிபாலவும் பொங்கி எழுந்தார்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் சமீர டி சில்வாவினால் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு குரலின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி நபர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது தார்மீக அரசியல் செயல் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீங்கிழைக்கும் கருத்து குறித்து எதிர்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (03) இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.