Home இலங்கை ஒரு குடும்பத்துக்கெதிராக மூன்று கிராமங்கள்? நிலாந்தன்.

ஒரு குடும்பத்துக்கெதிராக மூன்று கிராமங்கள்? நிலாந்தன்.

by admin

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் சாதனைகளில் ஒன்றாக காட்டப்படுவது அவருடைய கிராம எழுச்சித் திட்டமாகும். சிங்களத்தில் கிராமோதய என்றழைக்கப்பட்ட அத்திட்டத்தின் மகுட வாசகம் தமிழில் பின்வருமாறு அமையும்…”2000வது ஆண்டில் அனைவருக்கும் புகலிடம்”.அது தமிழில் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றும், அனைவருக்கும் வசிப்பிடம் என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் சிங்களம் தெரிந்த ஒரு நண்பர் கூறுவார். மேலும் அவர் பகிடியாக செல்வார் அந்த வாசகத்தில் ஒரு தீர்க்கதரிசனம் உண்டு என்று. தமிழ் மக்களில் அனேகமானவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்குள் அகதிகளாக்கப்பட்டு விடுவார்கள்.அதனால் அவர்களுக்கு புகலிடம் தேவை என்பதை அது முன்னறிவிக்கிறது என்று அதை விளங்கிக் கொள்ளலாம் என்பது எனது நண்பரின் வியாக்கியானம்.

இவ்வாறு அரசாங்கத்தால் கிராமங்கள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில், குறிப்பாக ஆயுத மோதல்களுக்கு பின்னர் படைத்தரப்பினால் நல்லிணக்க கிராமங்கள் கட்டிக் கொடுக்கப்படும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில்,அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் மக்கள் கிராமங்களை உருவாக்குவது என்பது ஒரு சுவாரசியமான முரண்தான்.

அரசாங்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கிய ஒரு புதிய தலைமுறை காலிமுகத்திடலில் “கோட்டா கோகம” என்ற ஒரு போராட்டக் கிராமத்தை உருவாக்கியது.அது பின்னர் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன் “மைனா கோகம” என்ற பெயரில் ஒரு புதிய கிராமத்தை குட்டி போட்டது. அதன்பின் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற வாசலுக்கு அருகே மேலும் ஒரு குட்டிக் கிராமம் பிறந்திருக்கிறது. அதன் பெயர் ” ஹொரு கோகம ” ஆகும்.

இதில் மைனா கோகமவில் வரும் மைனா ஒரு பறவை என்று நாம் நினைக்கக்கூடும்.ஆனால் சிங்களத்தில் அதற்கு ஆபாசமான வியாக்கியானங்கள் உண்டு என்று சிங்களம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்துக்கு முன் உருவாக்கப்பட்ட கிராமத்தில் உள்ள “ஹொரு” என்ற சொல் கள்வர்களைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கள்ளர்களே வீட்டுக்கு போங்கள் என்று பொருள்.

முதலில் கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டார்கள்.அதன்பின் மஹிந்தவை வீட்டுக்கு போ என்று கேட்டார்கள்.இப்பொழுது நாடாளுமன்றத்தில் இருக்கும் கள்ளர்களை வீட்டுக்குப் போ என்று கேட்கிறார்கள். இவ்வாறு ஒருபுறம் அரசியல்வாதிகளை வீட்டுக்குப் போ என்று கேட்டு மக்கள் சுமார் 30 நாட்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோ குறிப்பாக ராஜபக்ச குடும்பமோ அவ்வாறு வீட்டுக்குப் போகத் தயார் இல்லை என்பதைத்தான் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன.

பௌத்த மகா சங்கம் தலையிட்டு ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போகுமாறு அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், மகா சங்கத்தை மக்கள் பிரதிநிதிகள் பொருட்படுத்தவில்லை என்பதையும் கடந்த சில நாள் நாட்டு நடப்பு நமக்கு உணர்த்துகிறது.மகா நாயக்கர்கள் வலியுறுத்தியது போல ஒரு புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தயாரில்லை என்று தெரிகிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. தன் பலம் எதிரியின் பலம் அனைத்தும் தெரிந்தவர்.எனவே தன்னை நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாது என்றும் நம்புகிறார். அப்படி எதுவும் நடந்தால் எதிர்க் கட்சிகளின் வரிசையில் போய் அமரவும் தயார் என்று கூறுகிறார். அண்மையில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனிடம் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இதன் மூலம் எதிர்க் கட்சிகளின் மத்தியில் இருந்து கொண்டு அவர் எப்படிப்பட்ட குழப்பங்களை செய்வார் என்பது ஆளும் கட்சிக்கும் தெரியும், அவருடைய சகோதரருக்கும் தெரியும். தென்னிலங்கையில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை எதிர்க்கட்சிகளால் கெட்டித்தனமாகக் கையாள முடியவில்லை என்பதனை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள் இப்பொழுது சஜித் இருக்கும் இடத்தில் மஹிந்த இருப்பாராக இருந்தால் நிலைமை எப்பொழுதோ தலைகீழாக மாறியிருக்கும் என்று கூறுவார்கள்.

அதே சமயம்,ஆர்ப்பாட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்புவது என்றால் ஒரு ராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கத்தான் வேண்டும் என்று மகாசங்கம் கருதுவதாக ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன்மூலம் மற்றொரு ராஜபக்சவை அதாவது சிங்கள பௌத்த அதிகாரத்தைப் பாதுகாத்த யுத்த வெற்றி நாயகர்களில் ஒருவரையாவது தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்கலாம் என்று மகாசங்கம் திட்டமிட்டது.யாப்பின்படி கோட்டாபயவை இலகுவாக அகற்ற முடியாது என்பதும் மகா சங்கத்துக்கு தெரிகிறது. அதனால்தான் மஹிந்தவை பதவியில் இருந்து இறக்கும் ஒரு புதிய ஏற்பாட்டை குறித்து மகாசங்கம் அறிவுறுத்தியது.

ஆனால் மஹிந்த அவ்வாறு பதவி துறக்கத் தயார் இல்லை. சில நாட்களுக்கு முன் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கதைக்கும் பொழுது சேர் ஜோன் கொத்தலாவல பல தசாப்தங்களுக்கு முன் பண்டாரநாயக்கவுக்குக் கூறிய ஒரு வாசகத்தை நினைவூட்டியிருக்கிறார். “கட்டப்பட்டிருந்த நாய்களை அவிழ்த்து விட்டு விட்டாய்” என்று கொத்தலாவல பண்டாரநாயக்கவுக்கு கூறியிருக்கிறார். அவர் மறைமுகமாக குறிப்பிட்டது பௌத்த பிக்குகளை என்றும் கருதப்படுகிறது. இப்பொழுது மஹிந்த அதை நினைவூட்டுகிறார். அவர் மகா நாயக்கர்களின் அழுத்தத்துக்கு பணிந்து பதவியை துறக்கத் தயாரில்லை என்று தெரிகிறது.

அப்படியானால் அடுத்த கட்டம் என்ன? இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டுதான் இனிமேலும் நடக்க போகின்றதா?

ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் ஐ.எம்.எப் போன்ற அமைப்புகள் உதவ முன்வராது. இந்தியா மற்றும் ஐஎம்எப் உள்ளிட்ட வெளித் தரப்புகளின் உதவியோடு இப்போது நிலவும் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்து விட்டால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்கி விடுவார்கள் என்று மஹிந்தவும் அவருடைய அணியும் நம்புகின்றது. அவர் அதைத்தான் அண்மையில் மனோ கணேசனிடம் தெரிவித்திருக்கிறார். இது ஐ.எம்.எப்.இற்கும் தெரிகிறது. அதனால்தான் உதவிகள் உடனடியாக வழங்கப்படாமல் கால இழுத்தடிப்பு செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் ஒரு பகுதி விமர்சகர்கள் மத்தியில் உண்டு. அதாவது அரசாங்கம் ஐஎம்எப் இடமிருந்து பெறும் உதவிகளின் மூலம் இப்போதிருக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்று மேற்கு நாடுகள் கருதுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்று மேற்படி விமர்சகர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஐஎம்எப், உலக வங்கி போன்றன உதவிகளை வழங்கும் பொழுது வழமையாக குறுகிய காலத்துக்குள் வழங்குவதில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

எதுவாயினும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது வெளி உதவிகளுக்கு ஒரு முக்கிய முன்நிபந்தனை ஆகும். ஆனால் அவ்வாறு ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளாலும் முடியவில்லை. அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போராட்டக்காரர்களாலும் முடியவில்லை, மகா சங்கத்தாலும் முடியவில்லை என்பதைத்தான் கடந்த வாரம் பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பின் பின்னரான நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இதில் மகா சங்கத்தின் பரிந்துரைகூட ஒரு விதத்தில் அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டை மஹிந்தவை நீக்கிவிட்டு விளையாடுவதுதான். ஆனால் மூன்று கிராமங்களை அமைத்துப் போராடும் புதிய தலைமுறையானது அவ்வாறான சங்கீதக் கதிரை விளையாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. கிராமங்கள் புதிது புதிதாக உருவாக்கப்படுவது அதைத்தான் காட்டுகிறது. இக்கட்டுரை பிரசுரிக்கப்படும் நாளில் அவர்களுடைய போராட்டம் முப்பது நாட்களை அடைந்துவிட்டது.ஆனால் அரசியல்வாதிகளின் மீது எதிர்பார்த்த அளவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியவில்லை என்பதைத்தான் சில நாட்களுக்கு முன் நடந்த பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு காட்டுகிறது. அதாவது தெருவில் இறங்கிப் போராடும் மக்களின் எதிர்ப்பை கண்டு அவர்கள் அஞ்சவில்லை என்று தெரிகிறது. அப்படியெ ன்றால் அடுத்த கட்டம் என்ன? இதைவிட ஆக்ரோஷமாக அறவழியில் போராட வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கிராமத்தை அரசாங்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் நீர்த் துப்பாக்கிகளின் மூலம் விரட்ட முயற்சித்தது. இவ்வாறான ஒடுக்கும் நடவடிக்கைகள் மேலும் புதிய கிராமங்களைப் பிறப்பிக்கும்.

ஹொருகோகம கிராமத்தில் சிந்தன தர்மதாச என்ற படைப்பாளி தனது எதிர்ப்பை வித்தியாசமாகக் காட்டினார். தனது உள்ளாடையை கழட்டிப் பொலிசாரின் தடுப்பு வேலியில் தொங்கவிட்டார்.அதைத்தொடர்ந்து உள்ளாடைகளில் எதிர்ப்பு வாசகங்களை எழுதி பொலிஸ் தடுப்பில் தொங்கவிடும் ஒரு புதிய போராட்டமுறை அங்கே தொடங்கப்பட்டது. அதைப்போலவே வேறு ஒர் ஆர்ப்பாட்டக்காரர் போலீசாரின் தடுப்பு வேலிகளுக்கு முன்னின்று கலை ஆடுகிறார். உருவேறியவராக போலீசாரை நோக்கி சாபங்களைப் பொழிகிறார். ஊடகவியலாளரின் கமராக்கள் அவரைச் சுற்றி சுற்றி படம் எடுக்கின்றன. அதாவது மந்திர மாயாஜாலங்களை நம்பும் ஒரு குடும்பத்துக்கு எதிராக, ஞானாக்கா போன்ற குறி சொல்வோர் மந்திரித்து கொடுக்கும் தாயத்துகளை பகிரங்கமாக கைகளில் அணிந்திருக்கின்ற ஒரு குடும்பத்துக்கு எதிராக, மகாநாயக்கர்களை காலில் விழுந்து வணங்கி தமது அரசியலை தொடங்கும் ஒர் அரசியல் பாரம்பரியத்துக்கு எதிராக, உருக் கொண்டு ஆடுவதன் மூலமாவது தமது எதிர்ப்பை காட்டலாமா என்று மக்கள் சிந்திக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. ஆனால் புதிது புதிதாக கிராமங்கள் முளைப்பதைக் கண்டு அல்லது, புத்தாக்க திறன்மிக்க மிக்க வினோதமான எதிர்ப்புகளைக் கண்டு, அல்லது மகா நாயக்கர்களின் புறக்கணிப்பை கண்டு, பயப்படாத மக்கள் பிரதிநிதிகளின் முன் ஒரு புதிய தலைமுறை மேலும் ஒரு புதிய அறவழிப் போராட்ட வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.இது ஒன்றும் நூதனமானது அல்ல. இது ஒரு பழைய கதைதான்.தமிழ்க் கதைத்தான்.

வவுனியாவை கடந்து தமிழ்ப் பகுதிகளுக்குள் வந்தால் அப்பழைய கதையை வாசிக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீதியோரங்களில் குடில்களை அமைத்துப் போராடும் முதிய பெற்றோரைச் சந்திக்கலாம். அவர்களுள் 130க்கும் குறையாதவர்கள் நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையோடு இறந்துவிட்டார்கள்.ஆம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதியது அல்ல. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதிய தமிழ் அன்னையர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அரசாங்கம் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அம்முதிய அம்மாக்களின் கண்ணீருக்கும் சாபங்களும் பயப்படாத ஒரு அரசியல் பாரம்பரியம்,இப்பொழுது உள்ளாடைகளைக் காட்டினால் மட்டும் பயப்படுமா? அல்லது,அது கலையாடிக் கலைக்கக்கூடிய ஒரு பேயா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More