ராஜபக்சக்களின் யுகம் இதோடு நிறைவுக்கு வருமென தெரிவிக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ருவிட் செய்துள்ள சனத், கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீது குண்டர்கள் களமிறக்கப்பட்டு தாக்கப்படுவார்கள் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை எனவும், போராட்டக்காரர்கள் மக்களுக்காகவே போராடுகிறார்கள். மாறாக ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்க அவர்கள் போராடவில்லை என்பதை காவற்துறையினர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும், ராஜபக்கசக்களின் யுகம் இதோடு முடிவுக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹேல ஜயவர்தன – குமார சங்கக்கார கண்டனம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் இன்று கொழும்பில், நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தனது ருவிட்டர் வலைத்தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ள குமார சங்கக்கார, தங்களது அடிப்படைத் தேவைகைள் மற்றும் உரிமைகளைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, அரசாங்கத்தில் உள்ள குண்டர்கள் மற்றும் குண்டர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தச் சம்பவம் அருவருப்பானது என்பதுடன் திட்டமிட்ட ஒன்று என்றும் பதிவிட்டுள்ளார்.மேலும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பிரதமர் விடுத்துள்ள அறிக்கைக்கும் குமார சங்கக்கார கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியாகப் போராடுபவர்களைத் தாக்கும் ஆளும் அரசாங்க ஆதரவு குண்டர்களின் கேவலமான செயற்பாட்டை கண்டிப்பதாக முன்னாள் வீர்ர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.