எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். – அதற்கு மதிப்பளிக்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் – மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியங்கள் களையப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருகின்றது.
ஆனால் எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றவர்கள் நாம்.
இதன்காரணமாக புலிகள் எம்மில் பலரை கொலை செய்திருக்கின்றார்கள். என்னை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வந்துள்ளோம்.
அதனடிப்படையிலேயே எமது அரசியல் செயற்பாடுகளும், தென்னிலங்கை மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனான எமது உறவும் இருந்து வருகின்றது.
இந்த அணுகுமறையினையே உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். வன்முறைகள் ஊடாக எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
எனவே, எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் என்றுள்ளது.