யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து , பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவு வண்டியை அழைத்து வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.




