Home இலங்கை காலிமுகத் திடலில் முள்ளி வாய்க்கால் கஞ்சி – நிலாந்தன்.

காலிமுகத் திடலில் முள்ளி வாய்க்கால் கஞ்சி – நிலாந்தன்.

by admin

12ஆண்டுகளாக எந்தக் காலிமுகத்திடலில் யுத்தவெற்றி கொண்டாடப்பட்டத்தோ, அதே காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டிருக்கிறது. எந்த காலிமுகத்திடலில் கடந்த 12 ஆண்டுகளாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, படை அணிவகுப்புடன் யுத்த வெற்றிக் கோஷங்கள் ஒலிக்கப்பட்டனவோ, அதே காலிமுகத்திடலில் போரின் இறுதிக்கட்டத்தில் இறந்து போனவர்கள் நினைவு கூரப்பட்டார்கள்.

இது ஒரு அடிப்படை பண்பு மாற்றத்தின் தொடக்கம். 12 ஆண்டுகளாக மே18 எனப்படுவது காலிமுகத்திடலில் படைத்துறைப் பரிமாணத்தோடுதான் நினைவு கூரப்பட்டது.அது யுத்தவெற்றி வாதத்தின் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டது.ஆனால் கடந்த மே 18 அன்று அது ஒப்பீட்டளவில் சிவில் தன்மைமிக்க ஒரு நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான பெயர்ச்சி.முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே சமைத்துப் பகிர்ந்தமை என்பது, கொல்லப்பட்ட மக்களை,அந்த மக்களின் துயரத்தை நினைவுகூர்ந்தமைதான். அது படைத்துறை பரிமாணம் அற்றது.சிவில் பரிமாணத்தைக் கொண்டது. பாதிக்கப்பட்ட நிராயுதபாணிகளான மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு நிகழ்வு.நிராயுதபாணிகளான மக்கள் அருந்திய ஓர் உணவை சமைத்துப் பகிர்ந்தமை வரவேற்கத்தக்கது.அது ஒரு மாற்றம். அது ஒரு தொடக்கம். ஆனால் அந்த மாற்றத்தில் தமிழ் மக்களுக்கு சில அடிப்படைக் கேள்விகள் உண்டு.

அங்கே நினைவு கூர்ந்த போது பின்னணியில் காணப்பட்ட பதாகையில் போரில் “இறந்தவர்களை” நினைவுகூர்வது என்று எழுதப்பட்டிருந்தது.அந்த வார்த்தைதான் இங்கே பிரச்சினை.வன்னி கிழக்கில் தமிழ் மக்கள் தாமாக இறக்கவில்லை.அதில் பெரும்பாலானவை இயற்கை மரணங்கள் அல்ல. அவர்கள் கொல்லப்பட்டார்கள்.அவர்களைக் கொன்றது போரும் போரின் விளைவுகளும்தான்.எனவே முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வது என்பது கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதுதான். அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ஓர் இனப்படுகொலைக் களத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது.ஆனால் காலிமுகத்திடலில் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் என்ற வார்த்தை இருக்கவில்லை.

அவ்வாறு இனப்படுகொலை என்று கூறுவதில் காலிமுகத்திடலில் குடியிருப்பவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கலாம். அவ்வாறு இனப்படுகொலை என்று அழைத்தால் அது நேரடியாக படைத்தரப்போடும், சிங்கள-பௌத்த யுத்த வெற்றிவாதத்தோடும் நேரடியாக மோதுவதாக அமையும். அதை அவர்கள் தவிர்க்க விரும்பியிருக்கலாம். ஆனால் தமிழ்மக்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனென்றால் கடைசிக் கட்டப்போரில் இறந்தவர்களை நினைவு கூர்வது என்று பொதுவாக வகைப்படுத்தும் போது அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், படைத்தரப்பு ஆகிய மூன்று தரப்புகளையும் நினைவு கூர்வதாக அமையும். ஆனால் தமிழ்மக்கள் நினைவுகூர்வது இனப்படுகொலையை.எனவே அங்கே படைத்தரப்பை நினைவுகூர முடியாது. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால்,தமிழ்மக்கள் நினைவுகூர்வது ஓர் ஒடுக்குமுறையை.எனவே ஒடுக்கப்படும் மக்கள் ஒடுக்கும் தரப்புக்கும் சேர்த்து நினைவுகூர்வது சாத்தியமில்லை.இனப்படுகொலையை நினைவுகூர்வது என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிதான். அந்த நீதி இனப்படுகொலையாளிகளுக்கு எதிரானது.ஆயின் யாருக்கு எதிராக நீதியைக் கேட்க்கிறார்களோ அவர்களையும் எப்படி நினைவு கூர்வது?

இவ்வாறு கூறுவதன்மூலம் காலிமுகத்திடலில் போராடிக்கொண்டிருக்கும் சிங்கள இளம் தலைமுறையை ஒடுக்குமுறையின் பிரதிநிதிகளாக இக்கட்டுரை வர்ணிக்கவில்லை. அதில் ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்ளாத தரப்புகளும் உண்டு. ஏற்கனவே ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த தரப்புக்களும் உண்டு.எனவே எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்குள் போட்டு பார்க்க தேவையில்லை.அதற்காக இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக வர்ணிக்க முடியாது.

அதேசமயம்,காலிமுகத்திடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் தொடக்கத்தை தமிழ் மக்கள் உதாசீனம் செய்யத் தேவையில்லை.ஒடுக்கும் தரப்பையும் ஒடுக்கப்படும் தரப்பையும் ஒன்றாக நினைவு கூர்வதில் இருக்கும் தர்க்க வழுவை கோட்டாகோ கமவிலிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ஒடுக்குமுறை இல்லாத ஒரு பின்னணியில்,ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு பின்னணியில் வேண்டுமானால் பொத்தாம் பொதுவாக போரில் இறந்த அனைவரையும் நினைவுகூரலாம். தமிழ்த் தரப்பு இதனை கோட்டா கம கிராமத்துக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

அக்கிராமத்தில் இருக்கும் சிங்கள இளையோர் சிங்கள தேசியவாதத்தை பிரதிநிதித்துவபடுத்துவதில் தவறில்லை.அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது.அவர்கள் சிங்கள தேசியவாதிகளாகவே இருக்கட்டும்.அதுதான் சரி.உதாரணமாக மனோ கணேசன் கொழும்புமைய அரசியலைச் செய்பவர்.அங்கே அவர் இனவாதத்தின் சேவகனாக இல்லாமல் இருந்தாலே போதும்.அவர் இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அது மகத்தானதே. அதேபோல திரைப்படக் கலைஞர் பிரசன்ன விதானகே ஒரு சிங்கள இனவாதியாக இல்லாமல் இருந்தாலே போதும்.அவர் இனவாதத்துக்கு எதிராகப் படம் தயாரிப்பாராக இருந்தால் அது மகத்தானது.அவர் தமிழ் தேசியவாதியாக மாறத் தேவையில்லை.யாரும் தங்களுடைய தேசிய இருப்பை இழக்கத் தேவையில்லை. இழக்கவும் கூடாது. ஏனென்றால், தமிழ் மக்கள் தமது தேசிய இருப்பை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம் தமிழ் மக்களுக்கும் அவ்வாறு ஒரு தேசிய இருப்பு உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசமாக தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அவ்வாறு ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால்,தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் இணைந்து இச்சிறிய தீவுக்குள் பல்லினத் தன்மை மிக்க ஒர் அரசுக் கட்டமைப்பை உருவாக்கலாம். அதுதான் பொருத்தமானது.

தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தேசியம் முற்போக்கானது. அதேசமயம் தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசியம் இனவாதப்பண்பு மிக்கது. அது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை மறப்பது.அதனால் அது பிற்போக்கானது.எனவே சிங்கள தேசியவாதத்தின் முற்போக்கான கூறுகளோடு தமிழ்மக்கள் சேர்ந்து வேலை செய்யலாம். காலிமுகத்திடலில் அதற்கான ஒரு வெளி திறக்கப்படுமாக இருந்தால் தமிழ்மக்கள் அங்கே உரையாட வேண்டும்

இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் காலிமுகத்திடலில் நிகழ்ந்த நினைவு கூர்தலைத் தமிழ்மக்கள் பார்க்க வேண்டும்.காலிமுகத்திடலில் உள்ளவர்களோடு இந்த விளக்கத்தின் அடிப்படையில் உரையாடலாம்.

ஆனால் தமிழ்த்தரப்பில் ஒரு பகுதியினர் அவ்வாறான உரையாடல்களுக்கு தயாரில்லை என்று தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையை மையமாகக் கொண்டியங்கும் “புழுதி” என்ற செயற்பாட்டு அமைப்பு ஒரு மெய்நிகர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது. அதில் மேற்படி கருத்தை வலியுறுத்தி இக்கட்டுரையாளர் பேசியபோது, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒரு நபர் அவ்வாறு சிங்களத்தரப்புடன் உரையாட முடியாது என்று வாதிட்டார். மேற்சொன்ன விளக்கத்தை அவரால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிந்தது.அவர் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்துக்காக யாழ்ப்பாணத்தில் வேலை செய்கிறார். அதேசமயம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளராகவும் காணப்படுகிறார்.

அவர் அவ்வாறு கதைத்த பின் தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கத்தின் வடகிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் யேசுதாஸ் தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் அதில் காலிமுகத்திடலில் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்துவதில் காணப்பட்ட சவால்களை சுட்டிக்காட்டினார்.அதேசமயம் தென்னிலங்கையில் சிங்களமக்கள் மத்தியில் ஏற்படும் சிறு மாற்றங்களை வடக்கு கிழக்கில் இருப்பவர்கள் எதிர்மறையாக நோக்குகிறார்கள்,அவற்றை பரிசீலிக்க அவர்கள் தயாரில்லை என்ற பொருள்படவும் அவர் கருத்து தெரிவித்தார்.

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது அவர் மேலும் விவரங்களைக் கூறினார். காலி வீதிக்கு அருகே கோட்டா கோ கம கிராமத்தின் முன்பகுதியில் நினைவு கூர்வதற்கு அங்கிருந்தவர்கள் தயாராக இருக்கவில்லை என்றும், அதனால்தான் கடலுக்கு அருகே ஒரு ஒதுக்கமான இடத்தில் நினைவுகூர வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.கோட்டா கோகம கிராமத்தில் இருந்த எல்லா செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றவில்லை என்றும், குறிப்பிட்ட சிறு தொகையினர்தான் பங்குபற்றினார்கள் என்றும் குறிப்பிட்டார். அந்த மெய்நிகர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவர் சார்ந்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணப் பிரிவைச் சேர்ந்தவரின் கருத்துக்களுக்கு எதிராகக் காணப்பட்டன.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் உட்பட கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஆசிரிய தொழிற்சங்கமான இலங்கை ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த வடபகுதி செயற்பாட்டாளர்கள் சிலரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு சேர்ந்து செயல்படுகிறார்கள். முன்னணி” ஒரு நாடு இரு தேசம்” என்ற கொள்கையை கொண்டது.

இலங்கை ஆசிரியர் சங்கமும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்பவை என்ற அடிப்படையில் அதன் உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அது சரி. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தேசியவாதிகளுடன் தமிழ்மக்கள் இணைந்து செயல்படலாம். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் சிங்கள முற்போக்கு தேசியவாதிகள் நினைவுகூர்தலை அதன் சரியான அர்த்தத்தில் அனுஷ்டிப்பார்கள். காலிமுகத்திடலில் கிராமம் அமைத்துப் போராடும் தரப்புகளுக்கும் அவர்கள் அதனை கற்றுக் கொடுக்க வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More