நியாய கிராமம் அமைதிக்கான நடைப்பயணம் 17ஆம் நாள் மாலை நிகழ்வுகள் நேற்றைய தினம் (28.05.2022) காந்தி பூங்காவில் 4.30 இற்கு நடைபெற்றது. சமகாலத்தில் இலங்கை மக்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பது சகல வகையிலும் மக்கள் வாழ்க்கையை பாதித்து உள்ள நிலையில் மக்கள் தங்களது தேவைகளையும் கேள்விகளையும் பதாதைகளில் தாங்கிக்கொண்டு நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
நடை பயணத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் ( 28.05.2022) மாலை 4:30 மணியளவில் நடமாடும் கார்ட்டூன் காட்சிப்படுத்தலும் கருத்துப் பகிர்வும் என்ற வகையில் அமைந்திருந்த நிகழ்வில் இடையிடையே பாடல்களும் பாடப்பட்டு கலைச்செயல்வாதமாக நியாயகிராமத்தின் குரல் வெளிப்பட்டிருந்தது. “எழுந்திடுவோம் நாங்கள் எழுந்திடுவோம், கேள்விகள் கேட்க எழுந்திடுவோம்…” என பாடல்களுக்கூடாகவும் தமது கேள்விகளை முன்வைத்திருந்தனர்.
நடமாடும் கார்ட்டூன் காட்சிப்படுத்தலில் கமலா வாசுகியின் (ஓவியர் ) கார்ட்டூன்களை தாங்கிய வண்ணம் மூன்றாவது கண் நண்பர்களும் நியாய கிராமத்தில் மக்கள் குரல்களின் பிரதிநிதிகளாய் கலந்து கொண்டிருந்தவர்களும் மக்களுடனான கருத்து பகிர்வில் கார்ட்டூன்களை தாங்கிய வண்ணம் ஈடுபட்டிருந்தனர். சிறுவர்களின் பங்களிப்பு என்பதும் இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வில் மிக முக்கியமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு நீதியைத் தேடும் மன்னார் பெண்களால் 2016இல் உருவாக்கப்பட்ட “ உண்மை காணதிரண்டோம் நீதி கேட்டெழுந்தோம்…” என்ற பாடலும், கமலா வாசுகியின் “சமத்துவம் சமத்துவம்…” பாடலும் பாடப்பட்டதோடு நியாய கிராமத்தின் அமைதி நடைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்கும் சகோதரனால் (சாகித்தியன்) உருவாக்கப்பட்ட பாடலும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாலை 4:30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் மக்களின் குரல்களாய் நின்று கலந்துக்கொண்டிருந்த பல்வேறு நபர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கலைச் செயல்வாதமாக எங்களுடைய நியாய கிராமத்தின் குரல் நேற்றைய தினம் வெளிப்பட்டிருந்தது. “உரிமைகோரி நடந்தோம்; நடப்போம்; நடந்துக்கொண்டிருப்போம்”. சென் செபஸ்தியார் தேவாலயத்திலிருந்து, காந்தி பூங்காவை நோக்கி அமைதி நடை பயணம். தினமும் காலை 8:45க்கு ஆரம்பமாகி, அரசடி பிரதான வீதியின் ஊடாக, 10.00மணிக்கு சென்று சேரும். வாரஇறுதி சனிக்கிழமைகளில் 4.30 மணியளவில் கலைவழி கலந்துரையாடல்கள் இடம்பெறும். எங்கள் உரிமை கோரி நடப்போம்… கைகோர்ப்போம்…
இரா.சுலக்ஷனா.