இந்த உலகத்தில் தற்போது இலங்கைத்தீவு பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கின்ற நாடாகவும் அதேவேளை மக்கள் போராட்டங்களின் உதாரணத்துக்கான ஒரு தேசமாகவும் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் புதிய கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி நகருகின்ற நிலைமாறு காலத்தில் வந்து நிற்கின்றது. பலதசாப்த காலங்களாக இலங்கைத் தீவில் வாழும் சாதாரண மக்களின் மனங்களைக் குடைந்து கொண்டிருந்த நியாயத்திற்கான கேள்விகள் இந்தப் பொருளாதார நெருக்கடிச் சூழலில் திரள் வடிவம் பெற்று வன்முறைகளுக்கு எதிரான, ஒடுக்கு முறைகளுக்கு எதிரான, சர்வாதிகார, ஊழல் மலிந்த ஆட்சிக்கட்டமைப்பிற்கு எதிரான, நியாயத்தைக் கோரும் மக்கள் எழுச்சியாக மேலெழுந்து வருகின்றது.
இனம், மதம், மொழி, சாதி, பால், பிரதேசம், வர்க்கம் என்ற பல்வகையான வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அணி திரண்டு நியாயம் கேட்டு வீதிக்கு வந்துள்ளார்கள். கடந்த பல தசாப்தங்களாக ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகவர்களாகத் தொழிற்பட்டு வரும் அதிகார வர்க்கத்தினரால் இலங்கைத்தீவின் சாதாரண வெகுமக்கள் பிரித்தாளப்பட்டும், ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வருகின்ற வரலாற்றைக் கேள்விகளுக்குள்ளாக்கித் தத்தமது உளக்கிடக்கைகளை வெளிக்கொண்டு வரும் நிலைமை இந்த மக்கள் எழுச்சியில் பிரதானம் பெற்று வருகின்றன.
இந்த மக்கள் போராட்டமானது ஆக்கபூர்வமான, புத்தாக்கச் சிந்தனைகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவின் வரலாற்றில் உள்நாட்டுக் கலவரங்களும், உள்நாட்டுப் போரும் வன்முறையினையே பிரதான போராட்ட வழிமுறையாகப் பின்பற்றி இந்நாட்டின் மனித வளங்களையும், மனிதத்துவத்தையும் சீரழித்த அனுபவங்களின் பின்புலத்தில் தற்போதைய மக்கள் போராட்டமானது அன்பு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, சமத்துவம், சுதந்திரம், சமூகநீதி, அகிம்சை எனும் கருத்தியல் தெளிவுகளுடன் புத்தாக்க நடவடிக்கைகளினூடாக முன்னெடுக்கப்படுவதனைக் காண்கின்றோம். இத்தகைய நிலைமைகள் உருவாகுவதற்கான பின்புலம் கடந்த தசாப்த காலங்களிலேயே முளை விடத் தொடங்கியமை கவனத்திற்குரியதாக உள்ளது.
குறிப்பாக இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக இயக்கம் பெற்று வந்த பெண்ணிலைவாதச் செயல்வாதங்களில் வன்முறைகளுக்கு எதிரான புத்தாக்கச் சிந்தனைகளுடனான எதிர்ப்பு நடவடிக்கைகள் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தன. பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களும் அவர்களுடன் சேர்ந்து செயலாற்றிய நபர்களும் சிறு சிறு குழுக்களாக அனைத்துலக பெண்ணிலைவாத சகோதரித்துவ வலைப்பின்னலுடன் இத்தகைய ஆக்கபூர்வமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். உதாரணமாக நுண்கடனுக்கு எதிராக வடமத்திய மாகாணத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம், கிழக்கிலங்கையிலே பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பெண்கள் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான கலையாக்க நடவடிக்கைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களினுடைய உறவினர்களால் குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் என்று இவற்றினை அடையாளங் காண முடிகின்றது.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பிரதான உத்தி முறைமையாக இனங்களுக்கிடையிலான பகைமையுணர்வுகளைக் கொதி நிலையில் வைத்திருத்தல் எனும் நடைமுறை அதிகாரத்தைச் சுவைத்த வர்க்கத்தினரால் கையாளப்பட்டு வந்த நிலையில் இன, மத, மொழி அடிப்படையில் பிளவுண்ட சாதாரண மக்களை இலங்கைத் தீவின் மனிதர்களாக ஒன்றிணைத்து அர்த்தபூர்வமாக காரியமாற்றச் செய்வதில் பெண்கள் அமைப்புக்கள் கடுமையாகப் பங்களித்து வந்துள்ளன. பெண்ணிலைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் ஆணாதிக்க வணிகப்பண்பாடு கட்டமைத்துள்ள பிரித்தாளுகைக்கான பொறிமுறைமைகளையும், கட்;டமைப்புக்களையும் கேள்விகளுக்குட்படுத்தி அவற்றைக் கட்டவிழ்த்து மிகச்சிறிய அளவுகளிலாயினும் நீடித்த கருத்து விளக்கத்துடன் பயணிப்பதற்கான வேலைத்திட்டங்களைச் சமூகங்களின் அடி மட்டங்களிலிருந்து வலுவாக்கஞ் செய்து வந்துள்ளார்கள். இவ்வாறு இலங்கை முழுவதும் சிறு சிறு அளவில் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களாலும், சமூக நீதிக்காகச் சிறு சிறு குழுக்களாகச் செயலாற்றிய நபர்களினதும், அமைப்புக்களினதும் செயற்பாடுகளினாலும் ஆக்கபூர்வமான மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்று அது இன்று விகசிப்படைந்து காணப்படுகின்றது.
இலங்கையின் தலைநகர் கொழும்பின் காலிமுகத் திடலில் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மக்கள் போராட்டக்களத்தின் நடவடிக்கைகள் தேசிய அளவிலும், அனைத்துலக மட்டத்திலும் கவனிப்பிற்குரியதாகியுள்ள அதேவேளை இதன் தாக்கம் இலங்கையின் அரசாங்கத்தின் இயக்கத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது. குறித்த காலிமுகத் திடல் போராட்டக்களம் பல்பரிமாணங்களைக் கொண்டதாக இயக்கம் பெற்று வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய பின்புலத்தில் கிழக்கிலே மட்டக்களப்பிலும் இன்றைய சூழலில் மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஆக்கபூர்வமான போராட்டம் கடந்த 12.05.2022 ஆந் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். ‘நியாயத்திற்கான நடைப்பயணம்’ என்ற பெயரில் தினமும் முற்பகல் 08:45 மணிக்கு கல்லடிப்பாலத்தடியிலுள்ள லேடிமனிங் வீதியிலிருந்து புதிய கல்முனை வீதி, அரசடிச்சந்தி, திருமலை வீதி வளைவு வழியாக மட்டுநகர் காந்தி பூங்காவை அடைந்து சற்று நேரம் அங்கு களைப்பாறி கலந்துரையாடிச் செல்வதாக இந்த நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது.
கடந்த தசாப்தங்களிலிருந்து கிழக்கிலங்கையிலே குறிப்பாக மட்டக்களப்பில் வீட்டு வன்முறைகள், குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்களுக்கான நியாயம் கோரியும், சமூக நீதியையும், பால்நிலைச் சமத்துவத்தையும் வலியுறுத்தியும் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆக்கபூர்வமான போராட்டங்களில் பங்கெடுத்து வந்த செயற்பாட்டாளர்களால் இந்த நடைப் பயணம் திட்டமிடப்பட்டு அது பலருடைய தன்னார்வத்துடனான பங்குபற்றுகையுடன் தொடரப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது.
தமது எண்ணங்களை, அபிலாசைகளை வெளிப்படுத்தும் சிறிய பதாகைகள், பிரசுரங்கள் என்பவற்றை வடிவமைத்துக் கொண்டு தனியாகவும், தத்தமது குடும்ப உறுப்பினர்களுடனும் வருகை தரும் தன்னார்வலர்கள் அமைதியாக சில நிமிடங்கள் நின்று ஒருவர் பின் ஒருவராக பொதுப்போக்குவரத்திற்கு எவ்விதமான இடைஞ்சல்களுமின்றி நடைபாதை வழியாகத் தமது நியாயத்திற்கான நடையினைத் தொடருகின்றார்கள். ஏறத்தாழ நாற்பது நிமிடங்களில் இந்நடைப் பயணம் காந்தி சதுக்கத்தை அடைவதனைக் காண முடிகின்றது. அங்கு சென்றதும் தாம் அணிந்து வந்த பதாகைகளை, பிரசுரங்களை மகாத்மா காந்தியின் சிலையைச் சுற்றியுள்ள பகுதியில் காட்சிக்குரியதாக வைத்துவிட்டு அங்கே சில நிமிடம் அமைதியாக இருந்து, சிறு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு பின்னர் தத்தமது நாளாந்தக் கடமைகளுக்குப் பயணமாகின்றார்கள். இவ்வாறு இவர்கள் கொண்டு வந்த பதாகைகள், பிரசுரங்களில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளமையினைப் பார்க்க முடிகின்றது.
‘அதிகாரக் குவிப்பு அனைவருக்குங் கேடு’
‘வேண்டாம் Pவுயு வேண்டாம் ‘
‘எல்லோரும் ஒன்றாக வாழும் நாடு ! ஊழல் வாதிகள் செல்ல வேண்டும் வீடு’
‘அன்றாடத் தேவைக்கு வரிசை வேண்டாம்! ‘
‘மாற்றம் வேண்டும்! ‘
‘எங்கள் கல்வியைக் குழப்பாதே! ‘
‘எனது பெற்றோரின் பணத்தைத் திருடாதே! ‘
‘அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும்! ‘;
‘னுநுயுடு வேண்டாம் ‘
‘வாய் பந்தல் போட்டு வதைத்து விட்டார் வாழ்க்கையை – அவர் வித்தைக்குப் பலியாக இன்னும் நாம் விளையாட்டு பிள்ளையா? ‘
‘உறவின் மடிவில் வெற்றியா? ‘
‘எமது தாய்நாடு எமது உரிமை’
‘இனி போதும் வீட்டுக்குச் செல்லுங்கள் ‘
இதனிடையே வாரஇறுதி விடுமுறை நாட்களில் மாலை வேளையில் குறித்த காந்தி பூங்காவில் இத்தகைய தன்னெழுச்சியாளர்கள் ஒன்றிணைந்து வன்முறைக்கு எதிரான பாடல்களைப் பாடுதல், கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் என்பவற்றிலும் பங்குபற்றுவதனைக் காண முடிகின்றது.
இலங்கைத் தீவின் இன்றைய நெருக்கடி மிகுந்த காலத்தில் புதியதொரு அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பினை நோக்கி நாடு செல்ல வேண்டிய நிலைமாறு காலத்தில் சாதாரண மக்கள் மௌனங் கலைத்து தத்தமது கருத்துக்களைப் பொது வெளியில் பகிர வேண்டியது அவசியமானதாக உணரப்படும் சூழலில் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு சாதாரணர்களின் கருத்துக்கள் மிக மிக அவசியமானதாக வலியுறுத்தப்படும் பின்புலத்தில் சாதாரண மக்கள் தத்தமது கருத்துக்களை ஆக்கபூர்வமாக வெளிக்கொண்டு வருவதற்கான போராட்ட வெளியாக மட்டுநகரில் முன்னெடுக்கப்படும் நியாயத்திற்;கான நடைப்பயணம் பரிமாணம் பெற்று வருகின்றது எனலாம்.
து.கௌரீஸ்வரன்.