ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தியது உயர் நீதி மன்றம்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் துமிந்த சில்வாவுக்கு வௌிநாட்டு பயண தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மூன்று அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.