உலகம் முழுவதும் மனிதர் வாழும் இடங்களில் எல்லாம் நாடகமும் அரங்கும் இயங்கி வந்திருப்பதையும், இயங்கி வருவதையும் காண முடியும். இந்த அரங்க ஆற்றுகைகள் பல்வகைத் தன்மைகள் கொண்டவையாகக் காணப்படுவது அவற்றின் சிறப்பியல்பாகும். மனித சமூகங்கள் தத்தமது நோக்கங்களுக்காகவும், விருப்பிற்கேற்பவும் ஆற்றுகை செய்து வந்திருப்பதும், வருவதும் யதார்த்தமாகும்.
ஆயினும் இந்த விடயங்கள் பதிவிற்கு எழுத்திற்கு வரும்பொழுது பதிவைச் செய்பவர்கள், எழுதியவர்கள் தத்தமது விடயங்களையே வெளிக்கொண்டு வந்தனர், வருகின்றனர். தங்களது விடயங்களை உயர்ந்தவையாகவும், உன்னதமானவையாகவும், தராதரமானவையாகவுங்கூட பதித்து எழுதி வைத்துக் கொண்டனர். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதுகளில் தமதல்லாதவற்றை தரந்தாழ்த்திக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதையும் தெளிவாகவே காணவும் முடிகிறது.
மார்க்க – தேசி, செவ்வியல் – நாட்டுப்புறவியல் (ஊடயளளiஉ – குழடம) என்ற உயர்வு தாழ்வான வகைப்பாடுகள் இந்த வகைப்பட்டதாகும். பால், சாதி, வர்க்க, இன, மத வேறுபாடுகளும் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தப்படுவதற்கு காரணமாக இருப்பதும் யதார்த்தம். இதன் இன்னொரு பாதகமான பரிமாணந்தான் நவீன கல்வியும் வரலாறும்.
எமது சூழலில் நவீன கல்வி என்பது காலனியக் கல்விதான், ஆதிக்க நோக்கில் தங்கள் நலன் மையக் கல்வியை மேற்கு ஐரோப்பியர்கள் நவீன கல்வியாகவும், அறிவுபூர்வமான (விஞ்ஞானபூர்வமான) கல்வியாகவும், முற்போக்கானதாகவும், அபிவிருத்திக்கானதாகவும் கட்டமைத்து விட்டிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் நாடகமும் அரங்கியல் கற்கைகளில் மேற்கைரோப்பிய நாடகங்களே கல்விக்குரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலக நாடக அரங்க வரலாறு என்ற பெயரில் மேற்கைரோப்பிய நாடக அரங்க வரலாறே கற்பிக்கப்பட்டு வருகிறது. நூல்களும், நூலகங்களும் இதனையே பேசி வருகின்றன. இணையத்தின் வருகை இந்த ஆதிக்க நிலைமையைக் கேள்விக்குட்படுத்துவதாக இருந்தாலும் கற்கை நெறிகளின் கட்டமைப்பு இத்தகைய தேடல்களுக்கும் புரிதல்களுக்கும் இடமளிக்காததையே காண முடிகிறது. கற்கை நெறிகளும், பாடத்திட்டங்களும் இன்னமும் காலனிய ஆதிக்கம் பெற்றவையாகவும், மேலும் வலுப்பெற்று வருபவையாகவும் இருப்பதையே காண முடிகிறது.
மேற்கைரோப்பிய மற்றும் இந்நாளில் ஐக்கிய அமெரிக்க ஆதிக்கங்களுடன் சமாந்தரமாக சமஸ்கிருதமய ஆதிக்கங்களும் இயக்கம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. இந்தப் பின்னணியிலேயே நாடகமும் அரங்கியலும் பாடப்பரப்பிலும் கலை ஆற்றுகைப் பரப்பிலும் தமிழர்களுடைய மரபுக் கலைகளான வட்டக்களரியில் ஆடப்பட்டு வருகின்ற கூத்துக்கள் விலக்கப்பட்டவையாகவும், பண்பாட்டுச் சிதைப்புச் செய்யப்பட்டவையாகவும் இருப்பதைக் காண முடியும்.
நவீன அறிவுச்சூழலிலும், நவீன கலைச்சூழலிலும் படச்சட்ட மேடைக்கெனத் திரிபுபடுத்தப்பட்ட நாடகமுமற்ற கூத்துமற்ற ‘இரண்டுங்கெட்டான்’ ஆற்றுகைகள் கூத்துக்களென கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. கிராமங்களில் மக்கள் மத்தியில் மரபு ரீதியான கூத்துக் கலைகள் வலுவான வகையில் ஆற்றுகை செய்யப்படும் மரபுகள் பலமாகக் காணப்பட்டாலும் அவை அறியாப் பொருளாகவும், தெரியாப் பொருளாகவும், பேசாப் பொருளாகவும் இழிவானப்பேசு பொருளாகவும் இருப்பதைக் காண முடியும். இந்த பின்னணியில் நவீன அறிவு மற்றும் கலைச்சூழலில் கட்டமைக்கப்பட்டு வந்த ஆதிக்க நோக்கு நிலைகள் கேள்விக்குட்படலாயிற்று. கூத்துக்கலை சார்ந்து நவீன அறிவுப் பரப்பில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்மைகள் தகர்க்கப்படலாயிற்று. கூத்துக்கலை, கலைஞர் மாண்பு பேசுபொருளாயிற்று. கூத்துப்பற்றிக் கூத்தர்களது குரல்கள் ஒலிப்பது வலுக்கத் தொடங்கியது. எழுத்திலும் பேச்சிலும் இது நிகழ்ந்து வருவதாக இருக்கிறது.
இந்த பின்னணியிலேயே களரியில் ஆடப்படும் மரபுக் கூத்துக்கள், நவீன சூழலில் ஆடப்படுவதற்கான நிலைமைகள் பல சவால்களுக்கும் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பண்பாட்டுத் திணைக்களம், பல்கலைக்கழகங்களில் வட்டக்களரியில் ஆடப்படும் மரபுக் கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்படுவது வழமையாகிற்று. கூத்தை, அது ஆடப்பட்டு வரும் இடங்களில் பார்வையிடுவதன் முக்கியத்துவம் வலுப்பெற்றிருக்கிறது.
கிராமங்களில் ஆடப்படும் கூத்தையும் கூத்தர்களையும் இழிவு செய்து வந்த நவீன எழுத்துக்கள், ஆய்வுகள் என்ற பெயரிலான புனைவுகள் நிராகரிக்கப்பட்டன. இக்கலை பற்றி அவதூறாகப் பேசும் எழுதும் ஆதிக்க நிலை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் பாடசாலைகளில் நாடகமும் அரங்கியலில் மரபுக் கலையான கூத்தை அதன் மெய்மைத்தன்மையுடன் கற்கும் சூழல் இன்னமும் இல்லை என்பது கல்வியின் நோக்கம் மீதான கேள்வியை எழச்செய்கிறது.
நவீன கல்விச் சமூகம் குறிப்பாக நாடக அரங்கக் கல்விச் சமூகம் அதன் மாணவ சமூகத்தினர் தத்தமது மரபார்ந்த கலைகளைக் கற்கும் சூழலை மறுத்து நிற்பதன் அறிவார்ந்த நிலைப்பாடு என்ன என்பது கேள்வியாக இருக்கிறது.
பாடசாலைப்பரப்பில் நாடக அரங்கு பற்றிய கற்றலில் தத்தமது அரங்க மரபுகள் பற்றி அறிய முடியாத வகையில் வைக்கப்பட்டிருப்பது ஆபத்தானது என்றால், கூத்தென்று நவீன நாடகமான இராவணேசனைக் கற்பிப்பதும் பேராபத்தானதாகும். கேள்விகளற்ற கல்விச் சூழலிலேயே இத்தகைய ஆபத்துக்களும் அபத்தங்களும் சாத்தியமாகும்.
இன்றைய இலங்கையின் கையறு நிலையின் மூலம் என்பது இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. வாழும் சூழலை, சூழலின் வளங்களை வாழ்வின் பொருளாக்கும் திறன்களை வளர்க்கும் கல்வியின் அவசியம் உணரப்பட வேண்டிய சூழலில், பாடசாலைகளில் கூத்தைக் கற்க விடாத, கூத்தின் புதிய பரிமாணங்களை அறிய விடாத நாடக அரங்கக் கல்வி என்பது ஆதிக்கங்களுக்குச் சேவகம் செய்யும், அவற்றை நிலை நிறுத்தும் கல்வியாகவே இருந்து விடுகிறது.
பாடசாலை மட்டத்தில் நாடகமும் அரங்கியலில் கூத்தை ஏன் படிக்கவில்லை என்பதுடன் இக்கேள்வி முடிவடைவதில்லை. இக்கேள்வி நவீன கல்வி மீதான அடிப்படையான கேள்வி எழுப்புதலுக்கான முன்னீடு மட்டுமே.
ஏனெனில் 2000 வருடங்களுக்கு மேலான அகழ்ந்தெடுத்த ஆதாரங்களுடன் வரலாறு காட்டும் தமிழ்ச் சமூகங்கள் பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் நீண்டதான வரலாறு கொண்டதெனப் பெருமை கொள்ளும் பின்புலத்தில் இத்தகைய வரலாற்றுப் போக்குகளில் உருவாக்கிய அறிவு முறைகள், கொள்கைகள் பற்றி எதைத்தான் கற்றுக் கொள்கின்றன என்பது அடிமைத்தன நீக்கத்திற்கான ஆரம்பக் கேள்வியாகும்.