வாவி போடும் சோற்றில் வாழும்
மனிதர்கள் நாங்கள்
வளங்கள் அள்ளி வழங்கும்
வாவி மகிமை பாடுவோம்.
உயிர்களுக்கு வாழ்வளிக்கும்
ஊணும் உறையுந்தான்
விரிந்து கிடக்கும் வாவி மடியில்
நிறைந்து கிடக்குது.
அள்ள அள்ள வாழ்வுதரும்
வாவி எங்குமே
வாழ்விருக்கு தொழிலிருக்கு
ஓய்ந்திருக்கக் கரையிருக்கு
தங்கள் அறிவில் தங்கள் திறனில்
தங்கி நிற்போருக்கு
தளராத மனமிருக்கு
தாராள வாழ்விருக்கு
தலைமுறைக்கும் வாழ்வளிக்கும்
முறைகள் காணுவோம்.
அறிந்து பகிர்ந்து முனையும்
வாழ்வை எமது ஆக்குவோம்.
பாடல் - 2
வாவி சூழ்ந்து அழகை அள்ளி நிறைந்திருக்கும்
அதன் வயிற்றில் உயிர்கள் வாழும் வளமிருக்கும்
கரைகளெல்லாம் கண்ணாக்காடு பரந்திரக்கும்
அதன் மறைவில் பல உயிர்கள் வாழ்ந்திருக்கும்
கண்காண குளிர்ச்சியாகும் பசுமை தரும்
தோணிகளை தள்ளிவிட்டால் தொழில்கள் வரும்
கடற்பெருக்கின் சீற்றத்தை பணிய வைக்கும்
அழிவு வராது உயிர்களைக் காத்துவரும்
வள்ளல் என்று கூறவைக்கும் வாவியினை
அழித்தொழிக்கும் மனிதர்களின் ஈனச்செயல்
நெஞ்சில் நெருப்பை எரிப்பதனை நினைப்பதில்லை
குப்பை சிதறிக் கிடக்க கண்கள் அவிவதில்லை
வாழும் உயிர்கள் அழிந்து போகும் வாவிச் சூழல்
வணிக மீனும் இறால் வளர்ப்பும் பெருகுதையோ
பல உயிர்கள் வாழ்வு கொல்லி உயிர் வாழும்
சில மனிதர் ஈனச் செயல் ஏற்போமா?
சி.ஜெயசங்கர்.