சிறிலங்காவின் தற்போதைய நிலைவரம் முழு அளவிலான மனிதாபிமான நெருக்கடியாக (full-blown humanitarian emergency) மாறுகின்ற ஆபத்து இருப்பதாக ஐ. நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் (United Nations Office for the Coordination of Humanitarian Affairs) எச்சரித்துள்ளது.
ஜெனீவாவில் நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ. நா. மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் பேச்சாளர் ஜென்ஸ் லாயேர்க் (Jens Laerke) இந்த எச்சரிக்கையை விடுத்தார். மக்கள் பலர் போதுமான உணவு அருந்தாமல் நாட்களைக் கழிக்கின்றனர். குடும்பங்களின் சுகாதார சேவைகள், பாதுகாப்பு மற்றும் சிறார்களின் கல்வி என்பன பெரும் ஆபத்தில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதேவேளை, ஐ. நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் சிறிலங்கா பிரதிநிதியின் தகவலின்படி, ஐந்து வயதுக்கு உட்பட்ட 17 வீதமான சிறுவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடங்குதற்கு முன்னரே போசாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர்கள் தற்சமயம் மேலும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கிறார். போசாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 56 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று அவர் வீடியோ வழியான கலந்துரையாடல் ஒன்றில் அபாய அறிவிப்புச் செய்துள்ளார்.
ஐ. நா. சபையும் அதன் பங்காளிகளும் சிறிலங்காவுக்கு 47 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளன. 22மில்லியன் சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் நாளாந்த மின் வெட்டும் எரிபொருள், சமையல் எரிவாயு போன்ற வற்றுக்காகத் தினமும் நீண்ட வரிசைகளில் நிற்கும் அவலமும் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளின் விலையேற்றமும் தட்டுப்பாடும் மக்களது நாளாந்த வாழ்வைப் பெரும் துன்பத்தில் தள்ளியிருப்பதாக ஐ. நா. நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
——————————————————————–
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
11-06-2022