மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் இன்றைய தினம் சனிக்கிழமை(18.06.22) காலை மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர் களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-06-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (18) உத்தரவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தை அடுத்து கடந்த வெள்ளி நண்பகல் கொலையுண்ட சகோதரர்கள் இருவரின் சடலங்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது டன் பிரேத பரிசோதனைக்காக கடந்த வெள்ளி மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும்,காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களும், உறவினர்களும் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த கொலை தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர்ளையும் மன்னார் பொலிஸார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில் இன்று சனிக்கிழமை(18) மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இது வரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.