Home இலங்கை ஆசியாவின் கேவலம் ? நிலாந்தன்.

ஆசியாவின் கேவலம் ? நிலாந்தன்.

by admin

கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஓடுகின்றன.பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பிதுங்கி வழிகின்றன.சனங்கள் வாகனங்களில் எங்கெல்லாம் தொங்கலாமோ அங்கெல்லாம் தொங்கிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.ஆபத்தான பயணங்கள். 

யாழ்ப்பாணத்தின் தெருக்களில் சைக்கிள்கள் மறுபடியும் அதிகரித்துவிட்டன. அரசு அலுவலர்கள்,அதிபர்கள்,மாணவர்கள் என்று பெரும்பாலானவர்கள் சைக்கிளுக்கு திரும்பி விட்டார்கள்.சைக்கிள்களின் விலை முன்னப்பொழுதும்  இல்லாத அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஒரு சைக்கிளின் விலை 50 ஆயிரத்தை தாண்டி விட்டது. வியாபாரிகள் இதுதான் சந்தர்ப்பம் என்று அறா விலைக்கு விற்கிறார்கள்.கடந்த பல ஆண்டுகளாக சோர்ந்திருந்த சைக்கிள் திருத்துனர்கள்,உற்சாகமாக கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.வாகனப் போக்குவரத்து குறைந்த தெருக்களில் சைக்கிள்களைப் பார்க்கும் பொழுது ஒரு விதத்தில் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு தீமைக்குள் விளைந்த நன்மை அது.கடந்த சில ஆண்டுகளாக அப்படித்தான் நிலைமைகள் காணப்படுகின்றன.கோவிட்-19 வந்த பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் உடற்பயிற்சி அதிகரித்த அளவில் ஒரு பண்பாடாக மாறியது. வைரசுக்கு முன்பு மஞ்சட்தூள் என்ற பெயரில் பல் பொருள் அங்காடிகளில் வாங்கியது தூய மஞ்சள் அல்ல என்பது கட்டி மஞ்சளை வாங்கி மாவாக்கிய போதுதான் தெரியவந்தது.வாசிக்காமல் விட்ட புத்தகங்கள் யாவும்  அப்பொழுது வாசிக்கப்பட்டன. குடும்பங்கள் ஒன்றாக இருந்து சமைத்துச் சாப்பிட்டன.

இப்பொழுது எரிபொருள் நெருக்கடியின் விளைவாக மறுபடியும் சைக்கிள் அதியாவசியப் பொருளாக மாறியிருக்கிறது.அந்த மாற்றத்தில் வேதனை உண்டு.ஆனாலும் அது ஒரு ஆரோக்கியமான மாற்றம்.தகவல் யுகத்தின் வேகத்தோடு சைக்கிள் ஓடாதுதான். ஆனால் தகவல் யுகத்தின் வேகத்தில் சிக்கி மனிதர்கள் இழந்த ஆரோக்கியத்தை மீளப் பெற அது உதவும். 1980பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் பெண் பிள்ளைகள் சைக்கிளில் படிக்கப்போனார்கள். இப்பொழுதும் போகிறார்கள்.ஆனால் ஒரு வித்தியாசம். இப்பொழுது துணைக்கு தகப்பனோ,தாயோ இன்னொரு சைக்கிளில் போக வேண்டியிருக்கிறது. அதுதான் கொடுமை. பெண் பிள்ளைகள் தனியாக அல்லது சிலர் சேர்ந்து படிக்கப் போகும் ஒரு காலம் தொலைந்து போய்விட்டது.

சனங்கள் இப்பொழுது சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்பதில்லை. அதற்காக காத்திருப்பதை விடவும் மாற்று வழிகளை அவர்கள் தேடத் தொடங்கி விட்டார்கள்.அப்படித்தான் எரிபொருளுக்காகவும் காத்திருப்பதில் சளிப்படைந்து வருகிறார்கள்.கடந்தவாரம் எரிபொருள் வரிசைகளுக்கு பதிலாக டோக்கன் பெறுவதற்கான வரிசைகள் அதிகளவு காணப்பட்டன.வராத எரிபொருளுக்காக ஏன் வரிசையில் நின்று டோக்கன் வாங்க வேண்டும் என்று சனங்கள் புறுபுறுத்தார்கள்.

எரிபொருளுக்காக அவமானகரமான, சலிப்பூட்டும் வரிசைகளில் நிற்பதை விட சைக்கிளுக்கு திரும்புவதே பொருத்தமானது என்று புத்திசாலிகள் முடிவெடுத்த ஒரு காலத்தில் கடந்த வாரம் இலங்கை தீவுக்கு மூன்று முக்கிய தூதுக்குழுக்கள் வந்து போயின.முதலாவது,பன்னாட்டு நாணய நிதியத்தின் தூதுக்குழு. இரண்டாவது, இந்திய வெளியுறவுச் செயலரின் தலைமையிலான தூதுக்குழு. மூன்றாவது,அமெரிக்கப் பிரதானிகளின் தூதுக்குழு. இம்மூன்று தூதுக்குழுக்களும் ஏறக்குறைய ஒரே நோக்கத்தை கொண்டிருந்தன. இலங்கைத் தீவை அதன் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றுவதன்மூலம் இத்தீவின் மீதான தமது பிடியை எப்படி மேலும் இறுக்கலாம் என்பதே அந்த ராஜதந்திர உள்நோக்கம் ஆகும்.இந்த விடயத்தில் சீனா கடந்த சில மாதங்களாக விலகி நின்று ஒரு சாட்சி போல பார்த்துக் கொண்டிருக்கிறது. சீனா ஏற்கனவே இலங்கை தீவில் ஆழமாகக் காலூன்றி விட்டது.இச்சிறிய தீவின் வரலாற்றில் முன்னப்பொழுதும் இல்லாத அளவுக்கு சீனா பலமாகக் காலூன்றி விட்டது.இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவை அவ்வளவு சுலபமாக அகற்ற முடியாது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்றுவது என்றால் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். துறைமுக நகரத்திலிருந்து சீனாவை அகற்றுவதற்கு தனிய வணிக நடவடிக்கைகள் மட்டும் போதாது. பலப் பிரயோகம் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே சீனாவை இப்போதைக்கு அகற்ற முடியாது. ஆனால் சீனாவோடு சேர்ந்து ஏனைய பெரு வல்லரசுகளும் இச்சிறிய தீவைப் பங்கிடலாம்.கவுணாவத்தை வேள்வியில் பலியிடப்பட்ட ஆட்டின் இறைச்சியை பங்கு போடுவது போல.

அப்படியென்ன்றால் 2009 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்த நாடு எங்கே?அவர்கள் 209ஆம் ஆண்டு யாரைத் தோற்கடித்தார்கள்? தங்களைத் தாங்களே தோற்கடித்தார்களா?அவர்கள் பெருமையோடு பிரகடனப்படுத்திய இறைமை எங்கே? பேரரசுகளால் பங்கிடப்படும் ஒரு சிறிய தீவு தன்னை இறமையுள்ள சுதந்திரமான நாடு என்று எப்படி அழைத்துக் கொள்ளலாம்?

இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது பிரித்தானிய மக்கள் வின்சன் சேர்ச்சிலை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.அவர் யுத்தத்தை வென்று கொடுத்தார். ஆனால் அதன்பின் நடந்த தேர்தலில் அவரை பிரித்தானியர்கள் நிராகரித்து விட்டார்கள். பிரித்தானியர்களுக்குத் தெளிவாக விளங்கியிருந்தது, யுத்தத்தை நடத்துவது வேறு,நாட்டை யுத்தமில்லாத ஒரு காலத்தில் நிர்வகிப்பது வேறு என்று. அந்தத் தெளிவு சிங்கள மக்களுக்கு இருக்கவில்லை. யுத்தத்தை வென்ற ஒரு தகுதிக்காகவே ராஜபக்ச குடும்பத்துக்கு தேர்தல் வெற்றிகளை அள்ளிக் கொடுத்தார்கள்.யுத்தத்தை வென்ற ஒரே தகுதி காரணமாகவே ஒரு குடும்பம் இந்த நாட்டை திருடியபோது பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் யுத்தமும் வைரசும் ஒன்று அல்ல என்பதை டெல்டா திரிபு வைரஸ் அகோரமான விதத்தில் நிரூபித்தது. அதுபோலவே யுத்தமும் பொருளாதாரம் நெருக்கடியும் ஒன்று அல்ல என்பது கடந்தஆண்டில் நிரூபிக்கப்பட்டது. 

யுத்தத்தை வென்ற ஒரே தகுதி மட்டும் நாட்டை ஆளப் போதாது என்பதை சிங்கள மக்கள் கண்டுபிடித்த போது,நாடு எரிபொருளுக்கும் சமையல் எரிவாயுவுக்குமாக வரிசையில் நின்றது.மின்சாரம் இல்லாத இருண்ட இரவுகளில் சிங்கள மக்களுக்கு ஞானம் பிறந்தது.பிரித்தானிய மக்களுக்கு யுத்தம் முடிந்த கையோடு பிறந்த ஞானம் சிங்கள மக்களுக்கு 13 ஆண்டுகளின் பின்னர்தான் பிறந்தது. யுத்த வெற்றியைச் சாப்பிட முடியாது என்பதை சிங்கள மக்கள் கண்டுபிடித்த பொழுது அவர்களிடம் சில பாண் துண்டுகளும் மின்சாரம் இல்லாத இருண்ட இரவுகளும்தான் மிச்சம் இருந்தன.அவர்கள் யுத்தவெற்றி நாயகர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள்.ஒரு உல்லாச வெளியாகக் காணப்பட்ட காலிமுகத்திடல் ஒரு  போராட்ட வெளியாக மாறியது. 

ஆனால் இதன் பொருள் யுத்த வெற்றிவாதத்திற்கு வயதாகிவிட்டது,அதன் பளபளப்பு நரைத்துவிட்டது என்பதல்ல.யுத்த வெற்றிவாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான சிங்களபௌத்த பெருந்தேசிய வாதத்தின் அப்டேட்ரற் வேர்ஷன்தான்.சிங்களமக்கள் இப்பொழுது யுத்தவெற்றி நாயகர்களைத்தான் குப்பைத் தொட்டிக்குள் வீசியிருக்கிறார்கள்.யுத்தவெற்றியை அல்ல. தேர்தல்மைய ஜனநாயகத்தின் மகத்தான பலவீனமே மக்களுடைய மறதிதான். பிலிப்பைன்ஸ் மக்கள் 36 ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரி மார்க்கோசை அடித்துத் துரத்தினார்கள்.ஆனால் 10 ஆண்டுகளில் அவருடைய மனைவி இமெல்டாவைத் தெரிவு செய்தார்கள். இப்பொழுது 36 ஆண்டுகளின் பின் அவருடைய மகனைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.மக்களுக்கு மறதி மிக அதிகம்.அது நாமல் ராஜபக்சவுக்குத் தெரியும்.யுத்த வெற்றிவாதத்தின் வாரிசு அவர். யுத்த வெற்றிக்கு வயதாகாதவரை நாமல் ராஜபக்ச நம்பிக்கையோடு காத்திருப்பார்.

சிங்கள மக்களின் கோபத்துக்கு அஞ்சி பெரும்பாலான ராஜபக்சக்கள் பதவிகளைத் துறந்து விட்டார்கள். ஆனால் சிங்களமக்கள் யாரை முதலில் போ என்று கேட்டார்களோ அவர் இப்பொழுதும் கதிரையில் ஒட்டிக்கொண்டேயிருக்கிறார்.அதாவது போராட்டம் அதன் முழுமையான வெற்றியை இன்னமும் அடையவில்லை.அந்த வெற்றியைத் தடுப்பதற்காக ராஜபக்சக்கள் ரணில் என்ற முற்தடுப்பை வெற்றிகரமாக முன்னிறுத்தி விட்டார்கள். ரணிலை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்படுவதை மேற்கு நாடுகளும் வரவேற்கும்.ஏனென்றால் ஒரு தேர்தல் இல்லாமலே ஆட்சி மாற்றத்தை செய்யலாம் என்றால் அது மேற்கு நாடுகளுக்கும் வசதியானது. ரணிலை விட்டால் உலகத்துக்கு வேறு தெரிவில்லை.ரணிலை விட்டால் ராஜபக்சங்களுக்கும் வேறு தெரிவில்லை.ஏன் நாடாளுமன்றத்துக்கும் வேறு தெரிவு இல்லை.

கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறுவதுபோல முழு நாட்டினதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு தலைவரை இப்பொழுது அரசியல் அரங்கில் காட்ட முடியாதுள்ளது. என்றபடியால்தான் பஸிலின் இடத்துக்கு தம்மிக்க பெரேராவை கொண்டு வந்திருக்கிறார்கள்.தம்மிக்க,ராஜபக்சகளின் பினாமி என்று அழைக்கப்படுகிறார்.அவரும் ஞானக்காவை போலதான் கதைக்கிறார்.”எனக்கான காலம் 6 மாதங்கள்.அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம்.அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால்,‘தாத்தா கம் ஹோம்’ எனக்கூறி பிள்ளைகள் எனது வீட்டுக்கு முன் வந்து விடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும். என்னைபோல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான – பொசிற்றிவ்வாக – எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்?”என்று தம்மிக்க கூறியுள்ளார்.ஆக மொத்தம் பசிலின் இடத்துக்கு கொண்டு வந்த ஆளும் ராஜபக்சகளின் பினாமிதான். அரசியலை அறிவியல் பூர்வமாக அணுகுபவர் அல்ல. அதாவது ஆளுங்கட்சியிடமும் தலைவர்கள் இல்லை.எதிர்க்கட்சியிடமும் தலைவர்கள் இல்லை.இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக மகா நாயக்கர்கள் கூறுகிறார்கள்.அது அரசியல்வாதிகளின் தோல்வி மட்டுமல்ல. மகா சங்கத்தின் தோல்வியுந்தான்.

யுத்தத்தை வென்று கொடுத்தவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்.யுத்தத்தில் வெல்லப்பட்ட நாடு அந்த  மக்களுக்கே சொந்தமில்லை. வைரஸ் இல்லாமலேயே சமூகம் முடங்கிவிட்டது. யுத்தம் இல்லாமலேயே தெருக்களில் ஊரடங்குச்சட்டம் நிலவுகின்றது.வாகனங்கள் இல்லாத தெருக்களில் சைக்கிள்கள் மெதுமெதுவாக ஓடுகின்றன. இலங்கைத்தீவு இப்பொழுது ஆசியாவின் அதிசயமா? அல்லது ஆசியாவின் கேவலமா? 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More