இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்காக கட்சி நிற பேதங்களை மறந்து முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.
இத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (03.07.22) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்கப்பால் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறைகள் – சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடுமையான பேரழிவு நிலையை அடைந்துள்ளனர்!
சுற்றுலாத் துறைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தற்போது கடுமையான பேரழிவு நிலையை அடைந்துள்ளனர் எனவும், அவர்களுகளுக்கு வழங்கப்பட்ட கடன் நிவாரண கால எல்லை மீண்டும் நீடிக்கப்படாமையால் இலட்சக்கணக்கான மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நாட்டின் செலாவனிக்கு வலு சேர்க்கும் சுற்றுலாத் துறையையும்,சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் துறையையும் முன்நோக்கிக் கொண்டு செல்வது அரசின் பொறுப்பாகும் என்றாலும்,தற்போது அது அவ்வாறு இடம் பெறுவதில்லை எனவும், பொது மக்களின் எண்ணப்பாடுகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்த புரிதலும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று (03) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.