ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,
யாழ் மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக் குழு, தேசிய கலை இலக்கிய பேரவை, தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம், குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனிஸ கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகிய பொது அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 9 ஆம் திகதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகளால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் சபா தனுஜன், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மனோரஞ்சன், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனிஸ கட்சியின் செல்வம் கதிர்காமநாதன், பன்மைத்துவ மக்களாட்சி மன்றத்தின் செ.திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.