
நீங்கள் அரண்மனையைக் கைப்பற்றலாம்.
அங்கரியாசனத்தில் அமரலாம்.
மேனிலை மாடத்திலிருந்து மெய்சிலிர்க்கலாம்.
பளிங்கென்ற குசினியிற் சமைத்துச் சாப்பிடலாம்.
யுகங்களின் களையில் அரசமெத்தையில் அயரலாம்
விழித்தெழுந்து குளிரூட்டிய கழிவறையில் உண்டது கழிக்கலாம் பின்
குண்டியும் கழுவலாம்.
நன்றென்று அந்தத் தாடகத்தில் முழுக்கும் போடலாம்.
எத்தனை நாட்கள்?
நீங்கள் இருந்த கதிரைகளை எறிந்து விடுவார்கள்.
குசினியை மாற்றி விடுவார்கள்.
மெத்தைகளை எரித்து விடுவார்கள்.
தடாகத்தை வறட்டி விடுவார்கள்.
அரண்மனைக்குத் தீந்தை பூசி உங்களின் நாற்றத்தையே அழித்து விடுவார்கள்.
உங்களால் அரண்மனைக்குள் நுளையத்தான் முடியும்.
ஒரு போதும் அரசனாக முடியாது.
எல்லாவற்றையும் மீறி உங்களால் அரசனாக முடிந்தால்
உங்களின் அரண்மனைக்குள் வேறு எவரும் நுழைய முடியாதபடிக்குப் பெரிய பூட்டை நீங்களும் போடுவீர்கள்.
வேட்டை நாய்களை வாசலில் நிறுத்துவீர்கள்.
இரவுக்கும் அஞ்சி ஊரடக்குவீர்கள்.
இவ்வுலகில் எங்களுக்குள்ளது இரண்டே இரண்டு தெரிவுகள் தான்:
ஒன்று
அரசனாகலாம்
அல்லது குடியாகலாம்.
தேவ அபிரா
07.2022
Add Comment