நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1983 ஜூலைக் கலவரம் ஏற்பட்டு 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜூலை மாதத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் உறவினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது நேற்றைய தினம் காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருக்கிறது.
போராட்டகாரர்கள் நேற்றைய தினத்தில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பண்டாரநாயக்க சிலையை சுற்றி 50 மீற்றர் தூரத்திற்கு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை போகக்கூடாது என்பதே நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை. பண்டாரநாயக்க சிலைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இடையே அதிகதூரம் உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தை மீள கையளிப்பதாக போராட்டகாரர்கள் சொன்ன பிறகு இந்த தாக்குதல் அரச படையினரால் இருட்டில் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சமூகம் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. இவ்வாறான சம்பவம் இனிமேல் நடந்தால் உங்களுக்கு உதவமெட்டோமென ஐனாதிபதிக்கு முக்கிய நாட்டு பிரதிநிதி முகத்துக்கு நேரே சொன்னார்.
கடந்த மே 9 தாக்குதல் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தாக்குதல் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்டது. மே 9 தாக்குதலை கண்டித்த ரணில் விக்கிரமசிங்க ஏன் இதனை கண்டிக்கவில்லை.
ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது. நேற்றைய தாக்குதல் நாட்டை பின்னடைய செய்துவிட்டது. பாசிச அரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என்றார்.