யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் என்பன மீட்கப்பட்டள்ளது. ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞன் அச்சுவேலி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் சென்று வீட்டு வளாகத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வேலை முடிந்து சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் இருந்த பெண்மணி தனது இரண்டு பெறுமதியான கைபேசிகள் காணாமல் போயிருந்தமை தொடர்பில் அறிந்து அயலவர்களிடம் அது தொடர்பில் கூறியுள்ளார்.
வீட்டு வேலை செய்து திரும்பிய இளைஞன் மீதே அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருந்தது.
அந்நிலையில் இரவு மீண்டும் அந்த இளைஞன் சாப்பாட்டு பார்சல் ஒன்றுடன் அந்த பெண்மணியின் வீட்டுக்கு வரும் போது அயலவர்கள் மடக்கி பிடித்தனர்.
இளைஞனிடம் விசாரித்த போது , பெண்மணி தனியே வீட்டில் இருப்பதனால் அவருக்கு பாதுகாப்பாக இருக்கவே தான் வந்ததாக கூறியுள்ளார். கைபேசி தொடர்பில் கேட்ட போது , தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
அதனை அடுத்து இளைஞனை ஊரவர்கள் பரிசோதித்த போது அவரது உடைமையில் இருந்து சிறிய ரக கத்தி , ஓடிக்கோலன் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டது. அதனை அடுத்து ஊரவர்கள் இளைஞனை அச்சுவேலி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.