யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ கற்கையில் முதுமாணி (Master of Christian Studies) முதலாம் அணி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு கடந்த புதன்கிழமை, பலாலி வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள உயர் பட்டப் படிப்புகள் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் மறை மாவட்டப் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி ஜஸ்ரின் பி. ஞானப்பிரகாசம், மன்னார் மறை மாவட்டப் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி எஃப். எல். இம்மானுவல் பெர்ணாண்டோ, திருகோணமலை மறை மாவட்டப் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி நோயல் இம்மானுவல் மற்றும் தென்னிந்தியத் திருச்சபையின் இளைப்பாறிய பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ கற்கையில் முதுமாணி கற்கைநெறியானது இரண்டு அரையாண்டுகளைக் கொண்ட – ஒரு வருட முழு நேர சுயநிதிக் கற்கைநெறியாகும். இலங்கையின் கல்வி சார் தகுதிகள் கட்டமைப்பின் (Sri Lanka Qualifications Framework – SLQF) பிரகாரம் 9 ஆவது தரத்துக்கிணையான இக் கற்நெறியின் கட்டமைப்பு, பாடத்திட்டம் என்பன கிருஸ்தவ நாகரிகத்துறையினால் தயாரிக்கப்பட்டதாகும். கற்கை நெறியை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உயர் பட்டப் படிப்புகள் பீடம் நிர்வகித்து நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்