தமிழக கடற்கரைகளில் கடந்த 15 நாட்களில் சுமார் 800 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது குறித்த விசாரணைகளை கடலோர பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து பைபர் படகொன்றில் கஞ்சாவை கடத்தி சென்ற போது , கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததை அடுத்து , படகில் இருந்து கஞ்சா மூட்டைகள் கடலில் சிதறி விழுந்த போதிலும் படகில் சென்றவர்கள் படகை மீட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் என கண்டறிந்துள்ளனர்.
அவ்வாறு தப்பி சென்ற கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் தமிழக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனுஷ்கோடிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை 96 கிலோ கஞ்சாவை கடலோர பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றி அதனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வர மீனவர்களின் வலையில் 30 கிலோ கஞ்சா பொதி சிக்கியுள்ளது. அதனை மீனவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்காது தாம் விற்பனை செய்ய முற்பட்ட நிலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் கஞ்சாவை விற்க முயன்ற 7 மீனவர்களை கைது செய்தனர்.
கடந்த வாரம் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திட்டில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர பாதுகாப்பு பிரிவினரால் , மணல் திட்டில் இருந்து 110 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள அரிச்சல் முனை பகுதியில் கரையொதுங்கிய 80 கிலோ கஞ்சாவைகாவல்துறையினர் மீட்டுள்ளனர்