கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் காணப்படுகின்றதென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார்.
யாழ் வணிகர் கழகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் வழங்க வேண்டிய தேவையுள்ளது.
புறக்கோட்டையில் இருந்து மொத்தமாக பொருட்களை கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றார்கள்.
புறக்கோட்டை வர்த்தக சங்கம் ஊடாக அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்பாக எமக்கு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இன்று கொழும்பு சந்தை நிலவரப்படி பொருட்களின் விலைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.
இன்று கொழும்பு புறக்கோட்டையில் சீனியின் மொத்த விலை 295 ரூபாயாக விற்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 310 ரூபாயாக விற்கப்படுகின்றது. போக்குவரத்து செலவு உட்பட இடங்களுக்கு இடம் விலைகள் வித்தியாசம் காணப்படும்.
கொழும்பு புறக்கோட்டையில் மிளகாய் 1550 ரூபாயாக விற்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 1600 ரூபாயாக விற்கப்படுகின்றது. பருப்பு 440 ரூபாயாக கொழும்பில் விற்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் பருப்பு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பூடு 420 ரூபாயாக கொழும்பில் விற்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 480 ரூபாய்க்கு பூடு விற்கப்படுகிறது.உருளைக்கிழங்கு 170 ரூபாயாக கொழும்பில் விற்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் 150 ரூபாயாக கொழும்பில் விற்கப்படுகின்றது. யாழில் 180 ரூபாயாக விற்கப்படுகின்றது.இறக்குமதி செய்யப்பட்ட மா 275 ரூபாயாக கொழும்பில் விற்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 300 ரூபாயாக கொழும்பில் விற்கப்படுகின்றது.
யாழ்ப்பாண நகரத்தில் பொதுமக்கள் கொள்முதல் செய்தால் ஏற்கனவே குறிப்பிட்ட விலைக்கு பொருட்களை வாங்க முடியும்.வேறு வேறு இடங்களுக்கு செல்லும்போது போக்குவரத்து தூரத்துக்கேற்ப விலைகள் மாறுபடும் இதுவே உண்மையான நிலவரம் – என்றார்