யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழில் இயங்கும் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலை வேளையுடன் மூடப்படுகின்றன. அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தேன். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடுபவர்கள் , கறுப்பு சந்தை வியாபாரிகள் , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் , விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகிறது. ஆகவே தாம் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் , அப்பகுதி பிரதேச செயலர் ஆகியோரின் முடிவின் பிரகாரம் மாலையுடன் மூடுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும். என தெரிவித்தார்.