காலிமுகத்திடல் போராட்டக்களத்தில், தற்காலிக கூடாரங்கள் அகற்றப்படுவதை தடுக்குமாறு கோரியும், போராட்ட களத்தில் இருந்து வெளியேறுமாறு காவற்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 04 மனுக்களும் இன்று மீளப்பெறப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம்.ஏ சுமந்திரன், சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள், தமது தரப்பினர் காலி முகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 123 நாட்களாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு இன்று காலை முதல் போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தையும் அகற்றுவதற்கு போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்திலிருந்து விலகுவதற்கு ஒன்றிணைந்த குழுவாக தீர்மானம் எடுத்ததாக, இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.