பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபா் ஒருவாின் கத்திக்குத்துக்கிலக்காகயுள்ளாா். எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.
அவரை குத்திய நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தொிவித்துள்ளாா்.
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இன்று இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
புக்கர் பரிசு வென்றவரான சல்மான் ருஷ்டி லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானார்.
குறித்த நிகழ்வில் பார்வையாளராக இருந்த நபர் ஒருவா் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியின் கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக நேரில் கண்டவா்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். மேலும் சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளாா்
கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவராகவும் பல சந்தர்ப்பங்களில் தனது படைப்புகளை பாதுகாக்கும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருபவருமாக சல்மான் ருஷ்டி விளங்குகின்றாா் என்பது குறிப்பிடத்தக்கது