அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டை விட்டு போகலாமா என்று கோட்டாபய ராஜபக்ஸ தன்னிடம் கேட்டிருந்தால், ”நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பேன்” எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கட்சியை வழிநடத்த தான் தேவையா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய அவர், அதை கட்சி முடிவு செய்யும் என்றார்.
தான் ஒரு சட்டத்தரணி என்பதால் நீதிமன்றங்களில் பயிற்சி பெற முடியும் என்றும் தேவைப்பட்டால் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் கோட்டாபய ராஜபக்ஸ பொறுப்பல்ல எனவும், இதற்கு தானும் முந்தைய அரசாங்கங்கள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
துரதிஷ்டவசமாக, தான் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கோட்டா செயல்பட்டார் என்பதால் அவரைக் குறை கூற முடியாது.
கோட்டா, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார் ஆனால் ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார்.
முன்னர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்த அவர், மென்மையாக மாறினார் என்றும் அவர் அதைச் செய்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், அவர் ஒரு அரசியல்வாதி அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.