Home இலங்கை ரணில் பலமடைந்து வருகிறாரா? நிலாந்தன்.

ரணில் பலமடைந்து வருகிறாரா? நிலாந்தன்.

by admin

பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில்லை.

கடந்த 21ஆம் திகதிவரை மொத்தம் 3353பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் 1255பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முழு உலகத்தையும் திருப்பி பார்க்க வைத்த அரகலயவின் பிரதான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதிகளாக கணிக்கப்படும் ஒரு நிலைமை ஏன் வந்தது?அரசியல் எதிர்ப்பை ஆக்கத்திறனோடு வெளிப்படுத்திய படைப்பாளிகள் குற்றவாளிகளாக வேட்டையாடப்படும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது?

காரணம் அரகலய மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை.அரகலயவை உற்பத்தி செய்த பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தும் முற்றாக அகற்றப்படவில்லை.ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபின் எரிவாயு எரிபொருள் போன்றன ஒப்பிட்டளவில் கிடைக்க தொடங்கி விட்டன.ஆனால் பொருட்களின் விலைகள் இறங்கவே இல்லை.அரசாங்கம் முட்டையின் விலையை நிர்ணயித்த போதிலும் சந்தையில் முட்டையின் விலை இறங்கவே இல்லை.அரசாங்கத்தின் விலை நிர்ணயங்கள் மக்களை கவரும் நோக்கிலானவை தவிர யதார்த்தமானவை அல்ல என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மண்ணெண்ணையின் விலை அதிகரித்துவிட்டது.அது விவசாயிகளாலும் கடத்தொழிலாளர்களாலும் தாங்க முடியாத அதிகரிப்பு.எனவே கீழ் மத்தியதரவர்க்கம் மற்றும் ஏழைகளால் நுகரமுடியாத அளவுக்கு விலைகள் உச்சத்தில் நிற்கின்றன.இது மக்களை எப்பொழுதும் தெருவுக்கு கொண்டு வரக்கூடியது. அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகள் சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முடிவுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு முன்னணிச் செயற்பாட்டாளர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே போட வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. அதாவது ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம் என்ற ஆபத்தை அவர் முன்னுணர்கிறார்.இது முதலாவது பிரதான காரணம்.

இரண்டாவது காரணம் மே ஒன்பதாம் திகதியும் ஜூன் 9ஆம் திகதியும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் வீடுகளையும் தேடித்தேடி எரித்து அழித்தவர்களைப் பழிவாங்குவது.மீண்டும் ஒரு தடவை ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கத் துணியாதபடி அவர்களை அச்சுறுத்த வேண்டும்.அதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை அவர் உபயோகித்திருக்கிறார்.அதாவது தன்னை பாதுகாத்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அவருக்குண்டு.

பொருளாதார நெருக்கடியை நீக்கினால் பிரச்சனைகளின் மூலகாரணம் பலவீனமடைந்துவிடும் என்று நம்புகிறார்.பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்று சொன்னால் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது என்று சொன்னால் எதிர்க்கட்சிகளையும்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய மக்களையும் சமாளிக்க வேண்டும்.அதற்கு,சர்வ கட்சி அரசாங்கம் ஒரு கவர்ச்சியான தீர்வு.ஆனால் தந்திரசாலியான ரணிலை நம்பி அரசாங்கத்தில் இணைய எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இந்த வாரமும் இதுகுறித்து சஜித் பிரேமதாசவோடு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சஜித் அணி தயாராக இல்லை.ரணிலோடு இணைந்தால் அவர் தன்னுடைய அணியைக் விழுங்கி விடுவார் என்று சஜித் பயப்படுகிறார்.வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று சில நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பில் கூறி இருக்கிறார். ஜேவிபியும் அவ்வாறு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் இல்லை. தமிழ் கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை.

எனவே ஒரு சர்வகட்சி அரசாங்கத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகத்தான் தெரிகின்றன.மாறாக எதிர்த் தரப்பிலிருந்து தனக்கு ஆதரவான ஆட்களை கழட்டி எடுக்கும் வேலையை ரணில் செய்யலாம்.அதை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.அது அவருக்குக் கைவந்த கலை.ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம் எதிர்க்கட்சிகளாலோ அல்லது மக்களாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்காது.

தாமரை மொட்டுக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. ரணிலைப் பாதுகாக்க வேண்டிய தேவை தாமரை மொட்டுக்கு உண்டு. எனவே ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பார்கள்.இது எதுவரை என்று சொன்னால், அடுத்த பெப்ரவரி மாதம் வரையிலும்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தோடு யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ரணிலுக்கு கிடைத்துவிடும்.அவ்வாறு கிடைத்தால் அதற்குப்பின் நடக்கக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுது அனுபவிக்கும் பெரும்பான்மையைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே.எனவே வரும் பெப்ரவரி மாதத்தோடு தனது பேரம் கீழிறங்கி விடும் என்று தாமரை மொட்டுக் கட்சிக்குத் தெரியும். தன்னுடைய பேரம் அதிகமாகிவிடும் என்று ரணிலுக்கு தெரியும். எனவே அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்.

அடுத்த ஆறுமாத காலத்துக்குள் அவர் தன்னை பலப்படுத்த வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும் என்று சொன்னால் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும்.ஒன்றில் அவரை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.அல்லது தோற்கடிக்க வேண்டும்.

அடுத்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னரும் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பாரா என்பது சந்தேகம்தான்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்றம் பெருமளவுக்கு அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.தாமரை மொட்டின் பெரும்பான்மை பெருமளவு அவருக்கு கட்டுப்பட்டது ஆகிவிடும்.அதன்பின் அவர் விரும்பியபடி காய்களை நகர்த்தலாம். இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அவர் உள்ளூராட்சி சபை தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தக்கூடும். தேர்தல் முடிவுகள் தாமரை மொட்டுக்கு பாதமாக அமையும். இப்பொழுது உள்ளூராட்சி மன்றங்கள் பெருமளவுக்கு தாமரை மொட்டின் கட்டுப்பாட்டுக்குள்தான் காணப்படுகின்றன. ஆனால் ஒரு புதிய தேர்தல் நடந்தால் தாமரை மொட்டு அந்த பலத்தை இழக்கக் கூடும்.அதேபோல மாகாண சபைகளுக்கான தேர்தலும் தாமரை மொட்தின் வீழ்ச்சியைக் காட்டக்கூடும்.எனவே புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய மாகாண சபைகளும் தமது பலவீனத்தை வெளிப்படுத்தலாம் என்ற அச்சம் தாமரை மொட்டுக்கு உண்டு.

அதனால்தான் நாடாளுமன்றம் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் கலைக்கப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்று தாமரை மொட்டுக் கட்சி சிந்திக்கின்றது.ரணில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் 22 வது சட்டத் திருத்த வரைபில், 19வது திருத்தத்தில் உள்ளபடி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கான கால எல்லையை நாலரை ஆண்டுகளாக மாற்றும் ஏற்பாடு இணைக்கப்படவில்லை.இருபதாவது திருத்தத்தில் உள்ளபடியே 21/2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று உள்ளது. இது தாமரை மொட்டைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்கு ரணில் செய்யும் தந்திரம் என்று அக்கட்சி நம்புகிறது.

அதனால்தான் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை 19இல் உள்ளதுபோல மாற்றுமாறு அண்மையில் ரணிலுக்கு கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்களை சமாளிப்பதற்காக ரணில் இப்போதைக்கு பொது தேர்தல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்.

அவர்களை சமாளிப்பது என்பதைத் தவிர, வேறு ஒரு உள்நோக்கமும் அவரிடம் இருக்கலாம்.பெப்ரவரி மாதத்தின்பின் ஒப்பிட்டுளவில் தனக்கு அதிகம் கட்டுப்படும் நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு,தன் எஞ்சிய ஆட்சிக் காலத்தை எப்படிக் கடக்கலாம்,தனது சொந்த கட்சியை எப்படி மீள இணைக்கலாம் என்று அவர் திட்டமிடுவார்.

ஒரு தேர்தல் நடந்தால் முடிவுகள் தாமரை மொட்டுக்குப் பாதகமாகவும் எதிர்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையக்கூடும். ஆனால் யு.என்.பிக்கு அது எப்படி அமையும் என்று இப்பொழுது கூறுவது கடினம்.ஏனென்றால் யூ.என்.பி.இப்பொழுது இரண்டாக உடைந்து கிடக்கிறது.எனவே நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என்று ரணில் அஞ்சுகிறார்.அதனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ஒரு புதிய தேர்தலை நடத்தவும் தயாராக இருக்க மாட்டார்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கும் விருப்பமில்லை. வரும் பெப்ரவரி மாதத்தின் பின் தாமரை மொட்டு கட்சியானது அவரில் தங்கி இருக்கும் நிலைமைகள் மேலும் அதிகரிக்கும். அந்த நிலையை அப்படியே பேணியபடி அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிப்பதற்கு இடையில் யு.என்.பியை எப்படிப் பலப்படுத்தலாம் என்று திட்டமிடலாம்.

எனவே சஜித்தை எப்படி வளைத்தெடுப்பது என்பதே அவர் முன் உள்ள சவால். சஜித்தை வளைத்து எடுத்தால் ரணிலுக்கு இரட்டை லாபம் உண்டு. அதன் மூலம் ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கலாம்.அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வெளிக்காட்டலாம். இரண்டாவது சஜித்தை தோற்கடித்து விட்டால் அல்லது சஜித்தை வழிக்கு கொண்டு வந்து விட்டால் யூ.என்.பி மீள இணைந்துவிடும். அதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் ரணில் முன்னரை விடப் பலமாகக் காணப்படுவார். எனவே இப்பொழுது ரணிலுக்கு உள்ள சவால்,சஜித்தை எப்படி வளைப்பது என்பதுதான். ஒரு புதிய தேர்தலுக்குப் போக அவர் தயாரில்லை. ஏனெனில்,ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார கேட்பது போல “134 எம்பிக்களா?அல்லது மக்களா?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கக்கூடிய ஒரு தேர்தலை நடத்த அவர் துணிய மாட்டார்?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More