யாழ்ப்பாணம், கீரிமலை ஊடான பொன்னாலை – பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து விடப்பட்டது.
ஆனாலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலையே மக்கள் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து இருந்தனர்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ பொலிஸ் காவலரனின் வீதி தடை போடப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும்.
குறித்த வீதியினை முழுமையாக மக்கள் பாவனைக்காக திறந்து விடுமாறு நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குறித்த வீதி செப்ரெம்பர் முதலாம் திகதி முதல் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.