முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான கொள்கையினால் தற்போது நாட்டில் நச்சுத்தன்மை கொண்ட, தரமற்ற 6 லட்சம் தொன் அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியற்றிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடையால் இலங்கையில் விவசாய பொருட்கள் உற்பத்தி 50 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது. இதன் காரணமாக இலங்கை தனக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே ‘முந்தைய அரசின் தவறான கொள்கை முடிவால் சுமார் 6 லட்சம் மெட்ரிக் தொன் அளவுக்கு தரமற்ற, நச்சுத்தன்மை கொண்ட அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் சில அமைப்புகளின் நடைமுறைக்கு ஒவ்வாத ஆலோசானைகளை கேட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விரும்பியதன் விளைவு, இன்று தரம்குறைந்த, நச்சுத்தன்மை கொண்ட அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டதே நாடு இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஆகும். இலங்கையில் விளையும் அரிசியை விட, இறக்குமதி செய்யப்படும் இந்த அரிசி மிகவும் தீங்கு மிக்கவை. மோனோகுரோடோபாஸ், கிளைபோசேட் ரசாயனங்கள் இலங்கையில் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டது இல்லை’ எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
ரசாயன உரங்களுக்கு தடை விதிக்கும் முன்பாக இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.