ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் – அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு பெயரிடப்பட்டு, ஐக்கிய நாடுகளின் யாழ்ப்பாண பிரதிநிதியிடம் இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளர் அமைப்பாளர் ஆகியோரால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கையை வௌியிட்டு, அதில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தமையை வரவேற்பதாகவும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்று வரை சரியான தீர்வுகள் மற்றும் மறுவாழ்வு இன்றி அவதியுற்று வருவது கவலைக்குரியது என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி, இறுதி அறிக்கையில் உள்வாங்கி, சர்வதேசத்தின் கவனத்தை தமது பக்கமும் திருப்ப வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.