அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வரும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக சவுக்கு சங்கர் யூடியூபில் விமர்சித்திருந்தார். அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது. கடந்த 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதுடன், ஒரு வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகியிருந்தார். மதியம் வரை விசாரணை நீடித்தது. வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நீதித்துறை மற்றும் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்களை அந்த பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.