ஐரோப்பிய நாடான சுவீடனில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததனையடுத்து எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கின்றது. 349 இடங்களைக் கொண்டுள்ள சுவீடன். நாடாளுமன்றத்துக்கு கடந்த 11ம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில் நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளுங்கட்சியான சமூக ஜனநாயக கட்சி மயிரிழையில் தோல்வியைத் தழுவிய அதேவேளை எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி தலைமையிலான 4 கட்சி கூட்டணி வெற்றி பெற்றது
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 173 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சி 3 இடங்களை கூடுதலாகப்பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு ஒன்றல்லது இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இது ஒரு மெல்லிய பெரும்பான்மை. ஆனாலும் அது ஒரு பெரும்பான்மைதான் என தெரிவித்துள்ளாா்.
அத்துடன் நேற்று அவர் தான் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். அவர்தான் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது