இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதி கடுமையானதாக அமையும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி உலக உணவுத் திட்டம் தயாரித்துள்ள வரை படத்தின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றத்தால் 60 சதவீதமான இலங்கையர்கள் போசாக்கற்ற உணவை உட்கொள்வதாகவும் 63 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும் உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கையின் மத்திய, மேல், வடமேல், ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் உணவு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இதேவேளை, உணவுப் பணவீக்க புள்ளிவிவரங்களுக்கு அமைய உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்திலும், பெயரளவு உணவுப் பணவீக்க அடிப்படையில் நான்காவது இடத்திலும் இருப்பதாக உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.