Home உலகம் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம் – மூவர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம் – மூவர் உயிரிழப்பு

by admin

ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக தொிவிக்கப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளநிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமயநெறிகளை கடுமையாகப் பின்பற்றும் ஈரானில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையில் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘கலாச்சாரப் பிரிவு’ ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.

இந்தநிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் குர்திஸ்தானை சேர்ந்தவர் மாஷா அமினி (வயது 22) என்பவா் ஹிஜாப்பை சரியாக அணியவில்லையெனத் தொிவித்து கலாச்சார காவலர்கள் தாக்குதல் நடத்தி கைது செய்ததுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாஷா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது இதனைத் தொடர்ந்து, இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் நேற்று தலைநகர் தெஹ்ரானில் இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, குர்திஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More