சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் கண்ணீர் மல்க விடை பெற்றார். 41 வயதான அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு லேவர்ஸ் கோப்பை தொடர்தான் தமது இறுதிப்போட்டி என அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில் தனது இறுதிப்போட்டியில் தனது நண்பரும் கடும் போட்டியாளருமான ரபேல் நடால் உடன் ரோஜர் பெடரர் இணைந்து இரட்டையர் பிரிவில் சோக் மற்றும் டியோபி ஜோடியை எதிர்கொண்டு விளையாடினா்
இந்தப் போட்டியில் சோக் மற்றும் டியோபி வென்றதனை அடுத்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் விடை பெற்றார். இதனைத் தொடர்ந்து ரோஜர் பெடரரை ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் தங்களது தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்தனர்.
ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த ரோஜர் பெடரர், இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. நிச்சயம் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். சோகமாக இல்லை. உங்கள் முன் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். கடைசி போட்டியில் விளையாட முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என்னுடைய டென்னிஸ் பயணம் மிக பிரமாதமான ஒன்று. இதை திருப்பி செய்யவும் நான் ஆசைப்படுகிறேன் எனத் தொிவித்தாா்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 20 சம்பியன் பட்டங்கள் , 103 ஏடிபி தொடரில் சம்பியன் பட்டங்கள், 6 ஏ டி பி பைனல் பட்டம், ஒரு டேவிஸ்கோப்பை, முதலாம் தரவீரராக 310 வாரம் , மாஸ்டர்ஸ் தொடர் பட்டத்தை 28 முறை வென்றது, 31 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடியது போன்ற பல உலக சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்திருக்கிறார்.