இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிநிலைமை மக்களை வீதியில் இறங்கி போராட வேண்டிய தேவையை வலிந்து உருவாக்கியிருக்கிறது. மக்கள் எழுச்சியாக உருவாகிய போராட்டம் அகிம்சைவழியில், கலைவழி செயல்வாதமாக நாடுதழுவிய ரீதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முற்போக்கான முறையில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் தமக்கான உரிமைகளை வெளிப்படுத்தியவர்களாய், நியாயம் கோரி வீதியில் இறங்கியிருக்கின்றனர். பல்வேறு அரசியல் இடையூறுகளுக்கு மத்தியிலும், மக்கள் அறவழி போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
கண்துடைப்பாக இலங்கைமக்கள் பிரச்சினை சீர்செய்யப்பட்டுள்ளதாக மக்களை நம்பவைத்திருக்கின்ற அரசாங்கத்தை மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை என்ற நிலையில் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை, ஜனாதிபதி, பிரதமர்உட்பட்ட அமைச்சரவை வீடு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்து வருகின்றது. லஞ்சமும் ஊழலும் நிறைந்த அரசாங்கமும் அரசதலைவர்களும் நாட்டிற்கு தேவையே இல்லை என்பதே ஒட்டுமொத்த இலங்கையர்களின் குரல்வெளிப்பாடாக இருந்துவருகின்றது.
இனம்,மதம் என்ற அடிப்படையில் மக்களை இதுவரை காலமும் பிரித்துவைத்து பிரிவினைவாத அரசியல் செய்தவர்களின் முகத்திரைகள் கிழித்தெரியப்பட்டு, இனம்,மதம்,பால் பேதம் கடந்தவர்களாய் மக்கள்கூட்டம் தங்களது உரிமைகளை. கோரிக்கைகளை வெளிப்படுத்தி வருகின்றதுடன்,அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாகவும், யார் தலைவர்களாக அதாவது மக்கள் பிரதிநிதிகளாக இருக்கமுடியும் என்பதிலும் தெளிவாக இருக்கின்றனர்.
இந்த வகையில்தான் கடந்த 12.05.2022 அன்றுதொடக்கம் முன்னெடுக்கப்பட்டு நியாயத்திற்கான அமைதி நடைப்பயணம் – மட்டகளப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுவரைகாலமும் மக்களின் உள்ளக் குமுறல்களாய் இருந்த, நியாயமான கோரிக்கைகளை, பதாதைகளாக தாங்கியவண்ணம் சென். செபஸ்த்தியார் ஆலயமுன்றலில் இருந்து பிரதான பாதையின் ஊடாக காந்தி பூங்காவை சென்று சேரும் வண்ணம் காலை 8.45க்கு ஆரம்பமாகி அமைதி நடைபயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நடையின் தொடர்ச்சியாக பிரதி சனிக்கிழமைகள் தோறும் பி.ப 4.30மணியளவில், காந்தி பூங்காவில் நியாயகிராமத்தின் செயற்பாடுகள், கலைசெயல்வாதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உண்மைகாண திறண்ட மக்களின் சங்கமமாய், நீதி கோரி நடக்கும் நியாயபயணம், மக்களின் நியாயமான கோரிக்கைளை முன்னிறுத்தியது: நியாயமான கேள்விகளை வெளிப்படுத்துவது: உண்மையான நிரந்தர தீர்வுகளை தேடுவது. நியாயம் கோரி நடக்கும் நடைபயணத்தின் 150வதுநாள் வருகின்ற 8.10.2022 அன்று, அணிஅணியாய் திரள்வோம்; நீதி கோரி நடப்போம்.
இரா. சுலக்ஷனா