Home இலங்கை ஓட்டமாவடியில் – பெண் வெறுப்பும் பெண் உரிமை மறுப்பும் சுமந்து வரும் பதாகையும் – கண்டன அறிக்கை!

ஓட்டமாவடியில் – பெண் வெறுப்பும் பெண் உரிமை மறுப்பும் சுமந்து வரும் பதாகையும் – கண்டன அறிக்கை!

by admin


September 29, 2022
கிழக்கிலங்கையின் ஓட்டமாவடி பாத்திமா மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாகப் பெண் வெறுப்பும் பெண் உரிமை மறுப்பும் சுமந்து வரும் பதாகை ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாடசாலையின் வட்டாரங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மிகுந்த அதிருப்தி எழுந்துள்ளதாக நாம் அறிகின்றோம். இந்த விடயம் சம்பந்தமாக நாம் அறிந்தவற்றைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.


மேற்கூறப்பட்ட பதாகையில் கருப்பு நிறத்திலான ஹபாயா, ஜில்பாப், புர்கா போன்ற ஆடைகள் மாத்திரம் தான் சரியென கருத்துப்படவும் ஏனைய நிறங்களிலான ஆடைகள் தவறென கருத்துப்படவும் புள்ளடியிடப்பட்டு (படங்களுடன்) சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் பதாகையில் நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரிகள் என கருத்துப்படும் ஹதீஸ் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இப்பாடசாலையில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றார்கள். இப் பாடசாலையின் நிர்வாகமும் கடந்த சில வருடங்களாகத் தீவிரமாக இயங்கி வரும் ஒழுக்காற்று குழுவினரும் மாணவிகள், ஆசிரியைகளின் நடை, உடை, பாவனை சார்ந்து எடுத்து வரும் நடவடிக்கை பலர் மத்தியிலும் பதகளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு நிற ஜில்பாப், ஹபாயா, புர்கா போன்ற ஆடைகளை மாணவிகள், ஆசிரியைகள் மீது திணிப்பு செய்வதினால் இம்மாணவிகளும் ஆசிரியைகளும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் நாங்கள் அறிகின்றோம். பாடசாலை நிர்வாகத்தினதும் இந்த ஒழுக்காற்று குழுவினரினதும் தீவிரமான செயற்பாடுகளின் ஒரு விளைவுதான் மேற்குறிப்பிட்ட பதாகையாகும். இத்தகைய திணிப்பினாலும் அழுத்தத்தினாலும் மாணவிகள், ஆசிரியைகள் பாதிக்கப்பட்ட பொழுதிலும் இப்பாடசாலையின் நிர்வாகத்திற்கெதிராக யாரும் கேள்வி எழுப்ப தயங்குகிறார்கள்.


இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி, இப்பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அது மட்டுமன்றி நிதி, பாடசாலையின் நிர்வாகம் சார்ந்தும் முறைப்பாடுகள் கல்வித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.


ஆடைத்தேர்வு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்த விடயம். பாடசாலைகளிலும் இராணுவ பொலீஸ் சேவையிலும் சீருடை அணிவது உலகெங்கும் வழக்கமாக உள்ளது. பாடசாலை நேரங்களில் இலங்கை முழுவதிலும் முஸ்லிம் மாணவிகள் தலை மூடிய வெள்ளைச் சீருடையை அணிகின்றார்கள். மேற்குறிப்பிட்ட ஒழுக்காற்று நடவடிக்கை பாடசாலை நேரம் முடிந்த பின்பு அதே பாடசாலையில் நடத்தப்படும் தனியார் பிரத்தியேக (டியூசன்) வகுப்புகளுக்கு வரும் மாணவிகள் மீதே பிரயோகிக்கப்படுகிறது. தனியார் வகுப்புகளுக்குக் கட்டணமும் செலுத்தி இந்தத் திணிப்புகளையும் சுமந்து இக்கட்டான நிலையில் இருக்கின்றார்கள். இத்தகைய திணிப்பு ஆசிரியைகள்மீது ஒரு படி மேலே. நாள் முழுவதும் இந்த ஆசிரியைகள் கறுப்பு நிறத்தில் ஹபாயா, ஜில்பாப், புர்கா அணிய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.


ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்கும் அவரவர் ஆடைகளைத் தெரிவு செய்யும் முழுச் சுதந்திரமும் உண்டு, இது ஒரு அடிப்படை மனித உரிமையாகும் என்பதை நாங்கள் உறுதியாகக் கூற விரும்புகின்றோம். இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12 ற்கிணங்க எந்த ஓர் ஆணும் பெண்ணும் இன, மத, பாலியல் ரீதியில் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது.


ஆகவே இப்பதாகையின் வசனங்கள், இவ்வொழுக்காற்று நடவடிக்கைகள் இலங்கை அரசியலமைப்பு உறுதி செய்யும் பெண் உரிமைகளையும் அத்துடன் சர்வதேச சிறுவர் உரிமை சாசனத்தின் உறுப்புரைகளையும் மீறுகின்றது.


குறிப்பிட்ட பாடசாலை அரசாங்க பாடசாலையாகும். பல்லின மதங்களைச் சேர்ந்த மாணவிகள் படிக்கும் ஒரு பாடசாலையில் இவ்வாறு பதாகைகளை தொங்கவிடுவது இலங்கை கல்விக் கொள்கைக்கெதிரான செயலாகும்.


அண்மைக் காலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கெதிராகப் பேரினவாத அரசும் அதற்குப் பக்கபலமான தீவிர தேசியவாத சக்திகளும் சட்ட, அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து முஸ்லிம் பெண்களைத் துன்புறுத்தி வந்தன. அதேவேளை முஸ்லிம் சமூகத்திற்குள் இயங்கும் இத்தகைய ஒழுக்காற்று சக்திகளின் அச்சுறுத்தல்களாலும் முஸ்லிம் பெண்களின் தனிப்பட்ட நடை உடை பாவனை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இறுதியில், இந்த அரச பேரினவாத சக்திகளும் சமூக கலாச்சாரக் காவல் காக்கும் ஒழுக்காற்றுப் படைகளும் ஒரு புள்ளியில் தான் இணைந்து தொழிற்படுகின்றார்கள். இவ்விரு சாராரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான் . இத்தகைய ஒடுக்குமுறையினால் முஸ்லிம் பெண்களும், பெண் பிள்ளைகளும் தமது விருப்பத்திற்கேற்ப நாளாந்த இயல்பு வாழ்க்கையை வாழ முடியாது அல்லலுறுகின்றனர்.


உலகளாவிய ரீதியில் பெண் ஒடுக்குமுறை விரவி நிற்கும் எல்லாச் சமூகங்களிலும் பெண்கள் அவர்களது ஆடையணிகள் சார்ந்து கட்டுப்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக ஏகாதிபத்திய இஸ்லாமிய வெறுப்புக் கருத்தாடல்களினால் முஸ்லிம் பெண்கள் ஏற்கனவே பிரச்சினை மயப்படுத்தப்பட்டு சர்ச்சைக்குரிய பேசு பொருளாக விளங்குகிறார்கள். இந்த ஒழுக்காற்று நடவடிக்கை சக்திகளும் இதே வகையில் முஸ்லிம் பெண்களின் நடை உடை பாவனைகளை சர்ச்சைக்குள்ளாக்கி ஏகாதிபத்திய சக்திகளுக்கும் முஸ்லிம் வெறுப்பாளர்களுக்கும் உரம் இடுகின்றார்கள்.
இவ்விரு போக்குகளும் ஒன்றையொன்று பலப்படுத்தும் வகையில் தான் செயற்படுகின்றன. பாத்திமா கல்லூரியின் நிர்வாகம், பாடசாலை ஆசிரியைகள் மீதும் தனியார் கல்வி நேரங்களில் மாணவிகள் மீதும் பிரயோகிக்கும் இந்த அடக்கு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லாவிடில் இந்த சமூகத்தின்மீது அக்கறை கொண்ட முஸ்லிம் சமூகத்தவராகிய நாம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்.

சபானா குல் பேகம், ஜூவைரியா முகைதீன், பிஸ்லியா பூட்டோ, சிறீன் சரூர், ஹஸன் இக்பால், முஹம்மட் ஹுசைன், அன்பாஸ் அஷ்ரப், முஹம்மட் அஸீம், ஸர்மிளா ஸெய்யித், றிஸ்வி நாகூர், சிஹ்லா பாத்திமா,பாத்திமா சம்ஹா, ஹுமைதா ஹுஸைன், நிஹலா ஷஹானி,முஹம்மட் இம்தாத்,ஏ. பீ. எம். இத்ரிஸ், முஹம்மட் சப்ரி, அசனார் முஹம்மட் அஸ்லம், ஜிப்ரி ஹசன், மாஜிதா, முகமட் அலி யாசிர் அறபாத், பாத்திமா பர்ஸானா, பசீர் சேகுதாவூத், சலீம் முஹம்மட் கடாபி, முஹம்மட் சித்தீக், றமீஸா எச்.கான், அன்பேரியா ஹனீபா , நிஹால் அஹமட் , றினோஸா , றிபா முஸ்தபா ,றபியூஸ் முஹம்மட், ரீ.எஃப். றின்னோஸா, எம்.சி. றஸ்மின், ரீ.எம்.ஷாஃபிக், ஜென்சீலா மஜீட் , அமீர் பாயிஸ் ,றிஸ்வான் ஹனீபா, அஹமட் உசேன் ஹாரீஸ், புகாரி முஹம்மட் எம்.எல்., முஹம்மட் பரீட் , மொஹைமின் பர்ஹான், உமர் கத்தா பாத்திமா ஹஸ்ஸானா, பாத்திமா ஷிஹ்லா ,ஸஹீரா லபீர், கிப்சியா செய்னுல் ஆப்தீன், ஆரிகா காரியப்பர், ஸஹ்ரா சகீலா, ஸப்னா லதீப், சுமைய்யா ஜின்னாஹ், யூகின் ஆதம், கே.எல்.நப்fலா, எம்.எல்.எம்.அன்ஸார், இமாம் அத்னான், ரிஹானா நௌபர், நௌபர் ஏ.எல்.எம்., மன்சூர் ஏ.காதர், எம்.ஐ.எஃப். இன்ஷிரா, எம்.ஐ.எஃப். சாமிலா சர்ஜூன், றிபாதா ஜவ்ஹர், Dr. இஸ்ஸதுன்னிசா, பர்சானா ஹனிபா, நாதியா அப்பாஸ், பாத்திமா பர்வின் இஸ்மாயில், பஹிமா சஹாப்தீன், அப்துல் ஹக் லறீனா, எஸ்.எம்.மிஹாத், ஏ.ஏ.ஜப்பார், நதிரா சாலிஹ், பஸ்ரி சமசுதீன், றியாசுல் ஹசன், றியாஸ் குரானா, அபு நஜாத், முஹம்மட் நௌசாத் , ஏஆர் முஹம்மட் சமீர், சமீலா யூசுப் அலி

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More