மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய சவால்கள் – அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் பங்கேற்றிருந்தார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி அகியவற்றின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான குழுவினர் வொஷிங்டனுக்கு சென்றுள்ளதுடன், நேற்று மாநாடு ஆரம்பமாகியிருந்தது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி வசதி தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (10.10.22) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி பங்களிப்பு தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவித்ததுடன், அமைச்சர்களுக்கும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது கிடைத்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க ஊழியர்மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளமை நினைவுகொள்ளத் தக்கது.