யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞனின் தாயார் காவல்துறையினரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார்.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயார் இவரை திருத்தி தருமாறு காவல்துறையினரிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
28 வயதான குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைக்கு அடிமையான 15 வயதான தனது மகனை ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் காவல் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்து இருந்தார்.
குறித்த சிறுவனை காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சிறுவனை அச்சுவேலியில் உள்ள நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.