பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இவ்வாறு அவா் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
கட்சி தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், ரிஷி சுனக் ,நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மோர்டான்ட் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் போரிஸ் ஜோன்சன், விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து இன்று பென்னி மோர்டான்ட்டும் விலகுவதாக அறிவித்தையடுத்து, கட்சி ரிஷி சுனக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரமராக கடந்த 5ஆம் திகதி பதவியேற்ற லிஸ் டிரஸ், 20ஆம் திகதியே பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஷி சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து பிாித்தானியாவுக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை கென்யாவில் பிறந்து வளர்ந்தார், தாயார் தான்சானியாவில் பிறந்தார்.
இவரது தாத்தாமாா் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள் . இவா்கள் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் பிாித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
ரிஷி சூனக், 1980இல் இங்கிலாந்தின் செளத்தாம்டனில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பொது மருத்துவராக இருந்தார். இவரது தாயார் சொந்தமாக மருந்தகம் நடத்தி வந்தார்.வின்செஸ்டர் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கிழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் கற்றாா்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் போது, இந்திய கோடீஸ்வரரும், ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியைச் சந்தித்த ரிஷி சூனக். அவரைத் திருமணம் செய்து கொண்டாா். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ரிஷி சூனக் பிரிட்டிஷ் ஆசியாவின் முதல் பிரதமராகவும், 42 வயதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இளைய பிரதமராகும் வரலாறைப் படைக்கவுள்ளாா்.
நாளை அதிகாரபூர்வமாக பிரதமராக பதவியேற்கும் முன் அவர் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரால் பதவியேற்புக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.