யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின்னுலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பைக் கோர மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக செம்மணி மயான பரிபாலனசபையின் தலைவர் லயன் சி. இலட்சுமிகாந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக் குறிப்பில்,
2010ஆம் ஆண்டில் செம்மணி மயான பரிபாலனசபையின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பொது மக்கள், தொழில்முனைவோர்,மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 60 இலட்சம் ரூபா செலவில் மயானம் புனரமைக்கப்பட்டது.
எனினும் இதுவரை விறகையே எரிபொருளாகக் கொண்டு இம்மயானம் இயங்கி வருகின்றது.
தற்போது சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும், மரங்களை வெட்டுவதை நிறுத்தும் பொருட்டும், விறகுகளின் நாளாந்த விலையேற்றத்தைக் கணக்கிலெடுத்தும் செம்மணி மயானத்தை மின்மயானமாக மாற்றியமைப்பதற்கு மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது. இதற்கு பொதுமக்களின் பங்களிப்பை பரிபாலனசபை மீண்டும் கோருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டின் புனரமைப்பின்போது கொடை வழங்கிய பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் ஓய்வுநிலை உத்தியோகத்தர்களுக்கும் செம்மணி மயான பரிபாலன சபை நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் புதிய அபிவிருத்தித் திட்டத்தின்
பங்குதாரர்களாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.