குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது . கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலியாகி உள்ளனர். 177 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 19 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களை மீட்கப்பதற்கான தீவிரமான தேடுதல் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. குஜராத் மாநிலத்தை இந்த சம்பவம் உலகை உலுக்கி உள்ளது.
குஜராத் மோர்பி பகுதியில் உள்ள கேபிள் பாலம் மிகவும் பழமையான கேபிள் பாலம் ஆகும். பிரிட்டிஷ் காலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டது. 1879ல் திறக்கப்பட்ட இந்த பாலம் 230 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இந்த பாலம்தான் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. அகமதாபாத்தில் இருந்து 200 கிமீ தூரத்தில் மோர்பி பகுதி உள்ளது. இங்குதான் இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. நேற்று மாலை 6.42 மணிக்கு (30.10.22) அங்கு விபத்து ஏற்பட்டது.
சாத் பூஜாவை முன்னிட்டு நேற்று 500 பேர் வரை அந்த பாலம் மீது ஏறி உள்ளனர். இந்த பூஜை வடஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இந்து பூஜை ஆகும். தீபாவளிக்கு பின் 6 நாட்கள் கழித்து பூஜை நடக்கும். இதில் பரகிரிதி அம்மனை வணங்கி வழிபாடு செய்வார்கள். இதற்காக அவர்கள் நீரில் நின்று வழிபாடு செய்வது, நீரை பார்த்து வழிபாடு செய்வது, நீரை குடித்து வணங்குவது என்று பல்வேறு முறைகளில் பூஜைகளை செய்வார்கள்.
தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது போல இது நீரை மையப்படுத்திய பூஜை ஆகும். இதற்காக நேற்று அந்த பாலத்திற்கு 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில்தான் பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தண்ணீரில் மக்கள் மூழ்கி பலர் தத்தளிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள். இரவு முழுக்க மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், அதிகாலையில் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து கூடுதல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்த பாலம் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
7 மாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த பாலம் புனரமைக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் 26ம் தேதிதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்வதற்கு கட்டணம் 17 ரூபாயாக விதிக்கப்பட்டு இருந்தது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. ஆனால் எப்சி வாங்காமல் இவர்கள் பாலத்தை திறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.