நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் நடமாடும் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் குறித்த நடமாடும் சேவை நடைபெற்றது.
இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்..
குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள் தொடர்பானவை, வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்திற்கான நட்டஈடு பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்கு பற்றி இருந்தன.
இதேவேளை குறித்த நடமாடும் சேவை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களும் கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.