யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் கஞ்சா கலந்த போதைப்பாக்கு விற்பனையில் ஈடுபட்ட நபரும் , அதனை வாங்குவதற்கு வந்த இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வியங்காடு ஜி.பி.எஸ் மைதானத்தை அண்மித்த பகுதிகளில் கஞ்சா கலந்த போதைப்பாக்கு விற்பனை நீண்ட காலமாக நடந்து வருவதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்தகாவல்துறைக் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர்.
இதன் போது , கஞ்சா கலந்து விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த 3 கிலோ 100 கிராம் பாக்கு கைப்பற்றப்பட்டதுடன் அதனை விற்பனை செய்ய முற்பட்ட உடுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை அவரிடம் பாக்கினை வாங்குவதற்காக வந்த பாற்பண்ணை மற்றும் கல்வியங்காடு பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பாக்கு விற்பனை செய்ய முற்பட்ட நபரிடம்காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது , தான் யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் நடமாடி பாக்கு விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.