யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு பெற்ற வாகனத்தினை 20 இலட்ச ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழில். வாகனங்களை வாடகைக்கு விடும் நபரிடமிருந்து நான்கு நாட்களுக்கு வாகனம் வாடகைக்கு தேவை என ஒருவர் வாகனம் ஒன்றினை பெற்று சென்றுள்ளார்.
குறித்த வாகனத்தினை நெல்லியடி பகுதியில் 20 இலட்ச ரூபாய்க்கு அடகு வைத்து விட்டு அந்நபர் தலைமறைவாகியுள்ளார். வாகனத்தினை வாடகைக்கு கொடுத்த நபர் வாகனம் குறித்த திகதிக்கு மீள கையளிக்கப்படாதால், வாடகைக்கு பெற்ற நபருடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில், வாகனம் நிற்கும் இடம் அறிந்து அங்கு சென்று விசாரித்த போதே , அவரது வாகனம் 20 இலட்ச ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, சுன்னாகம் , மானிப்பாய் , மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய காவற்துறை பிரிவுகளில் இவ்வாறு வாடகைக்கு வாகனங்களை பெற்று சென்று அதனை பிறிதொரு நபரிடம் அடகு வைத்து பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவாகும் சம்பவங்கள் நான்குக்கும் மேற்பட்டவை பதிவாகியுள்ளதாக காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவற்துறை விசாரணைகளின் அடிப்படையில் , ஒரு கும்பல் ஒன்று இத்தகைய வேலைகளை செய்து வருவதாக தெரியவந்துள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும், வாடகைக்கு வாகனங்களை கொடுப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.