யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தெரிவித்தார்
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பாவனை தடுப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய நாட்களில் பொலிஸாரால் ஹெரோயின் பாவனையாளர்களை அதிகளவில் கைது செய்யப்படுவதன் காரணமாக, தற்பொழுது யாழ் நகரில் ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளது.
முன்னர் ஒரு முள்ளு ஆயிரம் ரூபாய் என விற்கப்பட்ட ஹெரோயின் போதை பொருள், தற்பொழுது 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது ஒரு நல்ல விடயம். வெகுவிரைவில் இது 5000 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், ஹெரோயின் விற்பனையாளர்கள் ஹெரோயின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் போது இந்த நடவடிக்கை இடம்பெறும்.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் கஞ்சா விநியோகம் தற்பொழுது முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு பாடசாலைகளில் போதை பொருள் பாவணையுடன் தொடர்பட்ட மாணவர்களை அடையாளம் காணும் போது அந்த மாணவர்களை உடனடியாக பாடசாலையிலிருந்து பாடசாலை விலகல் கடிதத்தை கொடுத்து அனுப்புவது தொடர்பில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே அவ்வாறு போதைப்பொருள் பாவனை உடைய மாணவனை வீட்டுக்கு அனுப்பினால், அவர் வீட்டுக்கு சென்று கட்டாயமாக போதை பொருள் தொடர்ச்சியாக பாவிப்பார். அதை விடுத்து விட்டு அவ்வாறு இனம் காணப்படும் மாணவர்களை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தாது, அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பி கொள்ள வேண்டும்.
குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய அமைப்புகள் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.